நன்பர்கள் பிரிவு

அன்று நாம் நினைத்திருக்க மாட்டோம்
கல்லூரிக்குள் நுழைந்த முதல் நாளில்
நமக்குள் இருந்த பயமும் தயக்கமும்,
இன்று, கடைசி நாள் பிரிவில்
கண்ணீரும் ஏக்கமுமாய் மாறும் என.

அன்று யாரென்றே தெரியாமல்,
பேசவே தயங்கிக் கொண்டிருந்த நம்மை
அருக‌ருகே அமர வைத்த காலம்,
இன்று இதோ வ‌ந்துவிட்டது, மனதால் நெருங்கி
பிரிய மனம் இல்லாதவர்களை
ஆளுக்கு ஒரு மூலையாய் துரத்தி விட.

அன்று தொடங்கி இன்று வரை தொடர்ந்த‌
நமது கல்லூரி பயணம், நம் மனங்களில்
விட்டுச் சென்றுள்ளது
பல பசுமையான நினைவுகளையும்
சில மறக்க முடியாத ரணங்களையும்.

சில குறும்பான‌ காரணங்களாலும்,
காரணமே இல்லாமலும்
நாம் வைத்த செல்ல பெயர்களால்
மறந்தே போனோம் பல‌ நிஜ பெயர்களை.
இனி,யாருமில்லை அப்பெயர்களைச்
சொல்லி கொஞ்சலாக‌ நம்மை அழைக்க‌.

பல நாட்கள் அவகாசம் இருந்தாலும்
கடைசி நாள் காலையில்,
முதல் இருக்கை மாணவிகளிடம் இருந்து
கடன் வாங்கி, அவசர அவசரமாய்
எழுதி முடித்து மதியத்திற்குள் சமர்ப்பிக்கப்பட்ட‌
ஒப்படைப்புகள் எல்லாம், சாம்பலாகின்றன‌ இன்றோடு.

காலையிலேயே திறக்கப்பட்டு இடைவேளைக்குள்
காலி செய்யப்பட்டுவிடும் நம் உணவு டப்பாக்கள்.
எனினும்,ஒரு போதும் நாம் உண்டதில்லை,
நம் வீட்டு உணவுகளை மட்டும்.

ஒவ்வொரு செமஸ்டர் எழுதும் போதும்
முடிவு செய்வோம்.அடுத்த செமெஸ்டருக்கு,
முதலில் இருந்தே படிக்க ஆரம்பிப்ப தென்று.
இதோ வந்து விட்டது கல்லூரியின் இறுதி நாள்.
படித்தும் முடித்து விட்டோம் ஒரு வழியாக...

கல்லூரியின் தயவால் வெற்றி பெற்ற காதல்கள்,
இடையில் முறிந்து போன சில‌ காதல்கள்,
விடை தெரியமாலே போன காதல்கள்,
காதலின் பெயரில் நடந்த சில‌ லீலைகள்,
என‌ எல்லாம் முடிகின்றன இன்றோடு.

இனி இருக்கப் போவதில்லை,
கடைசி இருக்கை அரட்டைகளும்,
வெள்ளிக்கிழமை பிரியாணிகளும்,
சில்லரைகளை மட்டும் வைத்துக்
கொண்டு கேண்டின் செல்வதும்,
தோழியின் தந்தை மரணத்திற்கு
நாம் எல்லோரும் அழுததும்,
கல்லூரிப் பேருந்து பயணங்களும்,
'கேக்' பூசிய பிற‌ந்த நாட்களும்,
தேர்வுகளில் தோள் கொடுத்த நட்பும்,
பொய் காரணங்கள் கூறி எடுக்கப்பட்ட‌ விடுப்புகளும்,
தேர்வு முடிவுகளுக்கான பயங்கலந்த காத்திருப்புகளும்
இன்னும் பட்டியலுக்குள் அடங்காத பலவும்….

‘இது நிரந்திர பிரிவில்லையே!’ ,
எப்படியும் எல்லோரும் தொடர்பில்
தானே இருக்கப் போகிறோம்,
என ஒருவரை ஒருவர் தேற்றினாலும்
தவிர்க்க முடியவில்லை
விழிகளின் ஓரத்தில் எட்டிப் பார்க்கும் கண்ணீர்த் துளிகளை...

எழுதியவர் : (9-Mar-18, 10:39 am)
பார்வை : 817

மேலே