உலக வெறுமை கீதம்
பசித்த வாய்க்குச் சோறில்லை அங்கே,
ருசித்த வாய்க்குப் போதவில்லை இங்கே.
பசி ருசியறியாது புசித்து பசியாற,
ருசி வந்து மட்டம் தட்டி வெறுத்தது உணவு.
உண்டு உண்டு பெருத்து உடல் நிலை கெடுத்தும் போதாது, போதாது, இன்னும் இன்னும்,
மனித ஆசையில் சிக்கி சீரழியுதே வாழ்க்கை.
வாயைச் சற்றுக் கட்டி வைக்க வேண்டும்,
அமைதியினுள் சற்று புதைந்திருக்க வேண்டும்,
யாரும் வேண்டாம்,
மரணமென்னை தழுவட்டும்.
இந்த உலகம் நிமிர்த்த முடியாத நாய் வால்,
நிமிர்த்தி நிமிர்த்திப் பார்த்ததால் நான் முற்றும் ஓய்ந்துவிட்டேன்.
மூளையில் தீபம் மட்டும் எரிகிறது,
உடல்செயல் எல்லாம் குறைகிறது.
நாடிகள் மெல்ல அடிக்க, இதயத்துடிப்புகள் குறைகிறது,
உணவில் நாட்டமில்லே,
புசித்தாலும் ருசியில்லை.
ருசித்தாலும் பசியில்லை.
இது திருப்தியா?
அதிருப்தியா?
சொர்க்கமா?
நரகமா?
அந்த உணர்வைச் சொன்னால் சொல்லுக்குள்ளே அடங்குமா?
கொப்பளிக்கும் கோபம் ஏன்?
கை தானே தரையில் அறைந்துக் கொப்பளிப்பது ஏன்?
யாரும் வேண்டாம்.
கோபமூட்டும் மனிதர்கள் சூழ வேண்டாம்.
நாட்களை மட்டும் கணக்கிடுகிறேன்,
என்று முடியும்?
இந்த உலகிற்கு வந்த பாவம் என்று தொலையும்?