அந்நாளே திருநாள்

நன்றி:: தினமணி கவிதைமணி:: 17-02-18

நன்றி:: கூகிள் இமேஜ்

===================
அந்நாளே திருநாள்..!
===================


எண்ணும் நல்மனத்தினுள் நற் சிந்தனையும்
........எழுவது நின்று அழுக்காற்றால் சீர்கெட்டது..!

உண்ணும் உணவில் கலப்படம் மிகுந்ததால்
........உண்ட நம்முடலும் நோயால் கெட்டழிகிறது..!

கொண்ட வாழ்வில் பேராசையால்..குறிதவறிய
........குறிக்கோளை மீட்டெடுப்பது எந் நாளோ..?

மண்ணியல் வளம் மறைந்ததெலாம் மீண்டும்
........மாறும்நிலை நமக்கு..அந்நாளே திருநாளாம்..!





பாயும் ஏவுகணை கொண்டு பயமுறுத்துவார்
........பக்கத்து நாடாயிருந்தும் பகையே கொள்வார்..!

ஆயுதமேந்திய கப்பலை கடலில் நிறுத்துவார்
........அண்டை நாடுகளை குலைநடுங்க வைப்பார்,.!

தாயும் குழந்தையும் தவித்திருக்கும் போதில்
........தன்கை யெறிகுண்டை வீசிக்கலகம் செய்வார்..!

வாயும்முகமும் துணியால் மூடிய கயவரின்தீய
........வெண்ணம்..! மாறும் அந்நாளே திருநாளாம்..!





நடமாடும் தெய்வமாம் ஞானியரும் தேவரும்
........நாளும் தவமிருந்தாரன்று பொதுநலம் கருதி..!

உடலாலும் உள்ளத்தாலும் நாட்டுநலன் மீது
........உறுதிபூண்ட நல்லோரும் பின்னர் தோன்றினர்..!

இடவசதி பொருள்வசதி இல்லாத ஏழைக்கு
........ஈயும் செயலையே எந்நாளும் செய்தனரவர்..!

கடவுளாக இச்செயலனைத்தும் தன் மனத்துளே
........காணும் அன்பர்க்கு!..அந்நாளே திருநாளாம்..!

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (14-Mar-18, 2:40 pm)
பார்வை : 87

மேலே