வெந்து தணிந்தது காடு

எண்ணக்காழ்ப்பில்
முதிர்ந்தது பொறாமை.
எழுதிவிட வேண்டும்
பல்லாயிரம் கவிதைகள்...
சூட்டில் கொதித்து
அறையெங்கும் கிடந்தன
சிந்தனை செல்வங்கள்.
எழுத எழுத
கவிதைகள்....
அறையெங்கும் பிரசவித்தன.
அழுதன. சிரித்தன.
சீறின. ஊறின.
நரமாமிசத்தில் சில
வெந்து தணிந்தன.
உயிர் கொண்ட கவிதை
அறையெங்கும் அலைந்தது.
சுற்றி சுற்றி ஓடின.
ஆடிப்பாடி தாவின.
காமம் கொண்ட கிழவியின்
ஆபாசம் காட்டின.
ஒன்றிலொன்று புணரும்
வேகத்தில் கௌவின.
கடித்தன. குதறின.
ஒன்றை விழுங்கிய
ஒன்றை தின்ற கவிதை
ஓயாது உண்டு களிக்க
எஞ்சியதில் மிஞ்சிய
அக்கடைசி கவிதை
அசைவப்பசியில்
திடுமென பாய்ந்தது
உன் குரல்வளை நோக்கி.

எழுதியவர் : ஸ்பரிசன் (16-Mar-18, 7:53 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 139

மேலே