நிழல் முகங்கள்

ஒருரூபாய் சம்பளத்தால் நூறுகோடி பெருகிடவே
தெருக்கோடி இருந்தோர்க்கும் தெய்வமென ஆனதய்யா !
வருமானம் வந்தபோதும் வரிகட்ட விரும்பாமல்
இருட்டறையில் பதுக்கிவைத்து அரசவாழ்க்கை வாழ்ந்ததய்யா !

தங்கத்தால் ஆடையினை தளுக்கோடு அணிந்துகொண்டு
உங்களாலே நானென்றும் உங்களுக்காய் நானென்றும்
பொங்கிவரும் அன்பாலே பொய்யெல்லாம் சொன்னாலும்
தங்கத்தாய் என்றவரை தலைமேலே தாங்குதய்யா !

உயிராக உணர்வாக உதவுகின்ற உறவாக
பயிரோடு உருவாகும் பசுந்தளைபோல் வாழ்ந்தென்றும்
கயிராகி கழுத்தினிலே காலன்போல் போட்டிழுத்து
உயிரதனை போக்கிவிட்டு உத்தமர்போல் நடிக்குதய்யா !

பதவிதனில் ஒட்டிடவே பசுந்தோலை தினம்போர்த்தி
அதர்மத்தின் வழிதன்னில் அன்றாடம் சென்றாலும்
உத்தமராய் தமைஎன்றும் உலகுக்குக் காட்டுகின்ற
எத்தர்தம் கூட்டமதும் இன்றிங்கு வாழுதய்யா !

பணத்துக்காய் நிறம்மாறும் பச்சோந்தி போலாகி
குணமழிந்து குடித்தவரும் கும்மாளம் போட்டாலும்
மணம்பொங்கி மணக்கின்ற மலராக மக்களிடம்
தினம்தினமும் நடிக்கின்ற திறன்பெற்று வருகுதய்யா !

திசைமாறும் காற்றதுவாய் தேடிஇவர் அலைந்தாலும்
பசைகொண்டு இருந்துவிடின் பாரதுவும் போற்றிவிடும்
அசையாத சொத்தெல்லாம் அகிலத்தில் வாங்கிடவே
இசையாத பேர்களையும் இளக்கிடுவார் பாருமய்யா !

நிழல்பார்த்து மக்களெல்லாம் நிசமென்று நம்புவதால்
சுழல்கின்ற காற்றினிலே தூசாகித் தவிக்கின்றார்
வழுவாத நெறியோடு நாடாண்ட தமிழரினம்
இழுக்கோடு இன்றிங்கே ஏமாந்து கிடக்குதய்யா !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (20-Mar-18, 10:12 pm)
பார்வை : 294

மேலே