விழி எழு வெல்

தூங்கியென்றும் கிடப்போர்க்கும் கிடைக்கின்ற சோற்றால்
துவண்டுவிடும் வாழ்வென்று உணராரோ என்றும் !
தேங்கிவிட்ட எண்ணமது தீமையென ஆனால்
துவண்டென்றும் வீழ்ந்திடுமே சுகமான வாழ்வும் !
தாங்குகின்ற விழுதெல்லாம் சொத்தையாகப் போனால்
தழைத்திடுமோ ஆலமரம் தரணியிலே நாளும் !
வீங்குவது நன்றன்று நோயெனவே ஆகும்
வளராது எல்லாமும் வரட்சியிலே வீழும் !

துடிக்கின்ற உணர்வோடு துணிந்தென்றும் நின்றால்
தொலைந்துவிடும் சோர்வெல்லாம் சுகமதுவே கிட்டும்.
வெடித்தால்தான் பஞ்சாகி, ஆடைதரும் நூலாய்
வினைமுடிக்க நினைத்தால்தான் வெற்றிவந்து சேரும்.
படித்தால்தான் அறிவதுவும் பக்கத்தில் நிற்கும்
பிடித்தால்தான் நற்கொள்கை நெஞ்சத்தில் தங்கும்
ஒடித்துவிட்ட வில்லன்றோ இராமனுடன் சீதை
ஓருரியாய் ஒன்றிருக்க வைத்ததுவே அன்று.

மடமையிலே ஊறிடாமல் மண்ணுலகில் வாழ்ந்து
மந்தைவளர் ஆடாக மாறாமல் செல்லு !
கடமையெது என்பதனை நீஉணர்ந்து நின்றால்
காலமதும் உன்செயலைக் கவனமுடன் கொள்ளும்
திடங்கொண்டு தீமைகளை தொலைத்திடவே செய்தால்
தழைத்திடுமே இன்பமெல்லாம் தன்மானம் ஓங்கும்
புடம்போட்ட பொன்னாக பூமியிலே வாழ
பாதையொன்று வகுத்திடுவாய் பயமின்றி நீயும்.

பழிகூறும் பாவங்களை பார்த்தேநீ நீக்கு
பணத்தாலே வருகின்ற வென்றியெனின் தூற்று
அழித்திடுவார் நீதியினை என்றறிந்தால் தள்ளு
அன்புகொண்டு நிற்போரை அகந்தனிலே ஏற்று!
விழிப்போடு செயல்பட்டு வேதனைகள் போக்கு!
வீரமுடன் எழுந்துநீயும் வெற்றியினைத் தூக்கு !
மொழியழிக்க முனைந்திடுவார் முகத்திரையே மாற்று
மானமுடன் வாழ்கின்ற வழிமுறையில் வெல்லு !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (20-Mar-18, 10:18 pm)
பார்வை : 266

மேலே