மகளல்ல நீ மறுதாய்
மனதில் மகிழம் பூக்க வைத்தாய்
மழலை சிரிப்பினால்..!
மதகு திறந்த நதியைப் போல
மகிழ்ச்சி காட்டினாய்..!
அகலின் ஒளியை அகத்தில் சேர்த்தாய்
அன்பு மொழியினால்..!
அகிலம் ஆளும் அன்னைத் தமிழாய்
என்னை ஆள்கிறாய்..!
சின்ன உதட்டசைவில்
சித்திர ஒலியழகில்
அம்மா என அழைத்திடவே...
சிறுவாணி சுவைகள்
சிந்தையெல்லாம் ஊறுதடி..!
கன்னத்தில் கன்னம் வைத்து
கட்டி அணைக்கும் இந்நொடியில்
எனைக் கட்டி ஆண்ட கவலையெல்லாம்
கல்லறையை தேடுதடி..!
மலடியென்ற என்னழுக்கை
சலவை செய்தாயே..!
குழந்தையல்ல நீ
என் குலவாழையடி..!
என்குரலின் எதிரொலியாய்
உன்குரலும் கேட்டிடுமே..!
மகளல்ல நீ
என் மறுதாயடி..!