ஆள்கிறான் தமிழன் உலகம் எல்லாமே | உலகெங்கும் சிறப்பு பெற்று வாழ்ந்து வருகிற தமிழர்கள்…

உலக பிரமிப்புகள் நிகழும் இடத்தில் ஒரு இந்தியனின் பங்கு இருக்கும் பொழுது கட்டாயம் அங்கு ஒரு தமிழனின் பங்கு இருக்கும் என்று நடிகர் திரு. கமல் ஹாசன் சொன்னது போல் உலகத்தில் நடக்கும் பல அத்தியாயங்களுக்குப் பின்னாலும் பல தமிழர்களின் பங்கு இருந்து கொண்டு தான் வருகிறது. அவர்களுள் சிலர்…

திரு. மோசசு வீரசாமி நாகமுத்து, 1947ல் பிறந்தவர், சில காலம் ஆசிரியராகவும், சில காலம் பத்திரிகையாளராகவும் இருந்து பின்னாட்களில் வக்கிலாகவும் பணி புரிந்து, இப்போது இவர் பிறந்த தென் அமெரிக்காவில் உள்ள குயானா நாட்டின் பிரதமராக உள்ளார். இவருடைய பெயரிலேயே தெரிந்திருக்கும் அங்குள்ள தமிழ் குடும்பத்தைச் சார்ந்தவர்.

திரு. மோசசு வீரசாமி நாகமுத்து
திரு. தர்மன் சண்முகரத்தினம், 1957ல் சிங்கப்பூரில் பிறந்த தமிழர். தென் கிழக்கு ஆசியாவின் வளம் செழித்த நாடாக இருப்பது சிங்கப்பூர் தான், அப்படிப்பட்ட சிங்கப்பூர் நாட்டின் துணைப் பிரதமராகவும் அந்நாட்டின் நிதி மற்றும் மனிதவள அமைச்சர் பொறுப்புடனும் உள்ளார். சிங்கப்பூரின் நிதி வளர்ச்சிக்கு இவரின் பங்கு முக்கியமானதாகும். மேலும் 2003 – 2008 வரை இவர் சிங்கப்பூரின் கல்வி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

திரு. தர்மன் சண்முகரத்தினம்
திரு. பெட்ரிக் ஜார்ஜ் பிள்ளை, ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள தீவு நாடான சேச்சில்லஸ் (Seychelles)ல் பிறந்தவர், இவரும் தமிழ் குடும்பத்தைச் சார்ந்தவர். அந்த சேச்சில்லஸ் நாட்டில் 2016 செப்டம்பரில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அந்நாட்டின் தேசிய சட்டமன்ற சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்பாக இவர் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சாராக பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

திரு. பெட்ரிக் ஜார்ஜ் பிள்ளை
திரு. பிச்சை சுந்தர ராஜன், அனைவரும் அறிந்ததே, மதுரையில் பிறந்து, சென்னையில் வளர்ந்து ஐ.ஐ.டி (Indian Institute of Technology) காரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்று பின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் (M.S) முடித்து, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டம் பெற்று இப்போது உலகையே சுருக்கியுள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

திரு. பிச்சை சுந்தர ராஜன்
திரு. ஏ.ஆர்.ரகுமான், சென்னையில் பிறந்து, 1992ல் ரோஜா படம் மூலம் தமிழில் அறிமுகமாகி இப்போது இரண்டு ஆஸ்கர்களுடன் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், சைனீஸ், பாரசீகம் என உலக அளவில் அனைத்து மொழிகளிலும் இசைத்துக் கொண்டிருக்கிறார் ரகுமான்.

திரு. ஏ.ஆர்.ரகுமான்
திரு. ஜார்ஜ் மேக்ஸ்வெல் அழகையா, இலங்கையில் உள்ள கொழும்பில், தமிழராக பிறந்தவர். 1961ல் இவரது குடும்பம் மேற்கு ஆப்பிரிக்காவிற்கு குடி பெயர்ந்தது. பின் இங்கிலாந்தில் மேல் படிப்பு முடித்து 1989ல் பி.பி
சி யில் (BBC – British Broadcasting Corporation) செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார். பத்திரிகைத் துறையில் பல விருதுகள் வாங்கியுள்ளார், அதில் BAFTA விருது, ராயல் டெலிவிஷன் சொஷைட்டியிடமிருந்து தலை சிறந்த சர்வதேச பத்திரிகையாளர் விருது ஆகியன குறிப்பிடத்தக்கன.

திரு. ஜார்ஜ் மேக்ஸ்வெல் அழகையா
திரு. சசீந்திரன் முத்துவேல், 41 வயதுடைய சிவகாசியை சொந்த ஊராகக் கொண்டவர், பெரியகுளம் வேளாண்மை கல்லூரியில் தோட்டக்கலைத்துறையில் பட்டம் பெற்றவர். இப்போது ஆஸ்திரேலியா கண்டத்தை சேர்ந்த பப்புவா நியூ கினியா மாகாணத்திற்கு ஆட்சியாளராக உள்ளார்.

திரு. சசீந்திரன் முத்துவேல்
திரு. அஸிஸ் அன்சாரி, கொலொம்பியாவில் பிறந்த தமிழர், ஹாலிவுட் பல படங்களிலும், அங்கு பிரபலமான பல தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்து வருகிறார். நகைச்சுவைத் தொடர்களில் நடித்து பல விருதுகள் வாங்கியுள்ளார்.

திரு. அஸிஸ் அன்சாரி
திரு. விஸ்வநாதன் ஆனந்த், சென்னையில் 1969ல் பிறந்தவர். 2000ஆம் வருடம் நடந்த FIDA சர்வதேச சதுரங்கப் போட்டியில் முதல் முறையாக பட்டத்தை வென்றார். பின் பல மேடுபள்ளங்களைத் தாண்டி 2007ல் இருந்து 2012 வரை தொடர்ச்சியாக அந்த FIDA பட்டத்தை தன் வசம் ஆக்கினார். அதன் பின் நடந்த 2013, 2014 ஆம் வருடப்போட்டிகளில் மேக்னஸ் கார்ல்ஸனிடம் தோற்று ரன்னர் அப்பில் இருந்தாலும் விஸ்வநாதன் ஆனந்த் இன்றளவும் உலகளாவிய சிறந்த சதுரங்க ஆட்டக்காரராக உள்ளார்.

திரு. விஸ்வநாதன் ஆனந்த்
திரு. ரகுராம் கோவிந்த ராஜன், 1963ல் போபால், மத்தியப் பிரதேசத்தில் தமிழ் குடும்பத்தில் பிறந்தவர். இந்திய ரிசர்வ் வங்கியின் 23வது கவர்னாக பணியாற்றியவர். மேலும் 2015ல் சர்வதேசத் தீர்வுகளுக்கான வங்கியின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். தற்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் நிதி (finance) சார்ந்த துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

திரு. ரகுராம் கோவிந்த ராஜன்
இது போன்று தமிழர்கள் உலகெங்கிலும் பல முக்கிய நிகழ்வுகளில் பெரும் பங்காகத் தான் இருந்து வருகின்றனர்.மொழி, கட்டிடக்கலை, நடனம், விளையாட்டு என நம் வளம் மிகுந்து கொண்டே தான் போகிறது, அதை இன்னும் நாம் சிறப்பாக கையாண்டு நம்மோடு சேர்த்து நம் நாட்டின் பெருமையை சர்வதேச அளவில் உயர்த்துவோம்.

தொகுப்பு: சா. கவியரசன்

எழுதியவர் : (23-Mar-18, 4:18 am)
பார்வை : 121

சிறந்த கட்டுரைகள்

மேலே