மின்னல் ,இடி, மழை

காது கிழிபடும் ஒலியுடன் கத்தி வெட்டுகிறது.
கனிவிட்டுச் சாறு சொட்டுகிறது.
இடிமின்னலுடன் மழை கொட்டுகிறது.

உறுமிக்கொண்டு நரசிங்கம் நகங்களால் இரணியன்
உடலைக் கிழித்திட உதிரம் வழிகிறது.
இடிமின்னலுடன் மழை பொழிகிறது.

கசையடிகள் வாங்கிக் கதறும் கார்மேகத்தின்
கண்கள் கண்ணீர் வடிக்கின்றன..
இடி,மின்னல், மழை, நிகழ்வுகள் நடக்கின்றன.


விளக்கம்

1 . கத்தி--------------------------மின்னல்
வெட்டும் ஒலி-----------இடி
சாறு --------------------------மழை
கனி ---------------------------மேகம்

2 .நகம் --------------------------மின்னல்
உறுமும் ஒலி ----------இடி
உதிரம் ----------------------மழை
இரணியன் உடல் ---மேகம்

3 . கசை-( சாட்டை)--------- மின்னல்
கதறும் ஒலி ----------------இடி
கண்ணீர் ---------------------மழை
அடிபடும் மனிதன்-----மேகம்

கார்மேகம் ----ஒரு மனிதனின் பெயர்
( கருத்த மேகம் என்று பொருள் கொள்ளுதல் தவறில்லை எனினும் இங்கே
தேவையில்லாதது )

குறிப்பு -1

பல ஆண்டுகளுக்கு முன் "ஹைக்கூ கவிதை " க்கான வரைமுறைகள் பற்றி நான் படித்த
ஒரு கருத்தைத் தான் "' "ஹைக்கூ கவிதை " எழுதும்பொழுது நினைவில் வைத்துக் கொள்ளுகிறேன்

"ஹைக்கூ கவிதை " க்கான வரைமுறைகள்

1 மூன்று வரிகளுக்குள் கவிதை இருக்க வேண்டும்

2 ஒவ்வொரு வரியிலும் குறைந்த பட்சம் மூன்றும் ,அதிக பட்சம் நான்குமாகச்
சொற்கள் இருக்க வேண்டும்

3 முதல் இரண்டு வரிகளுக்குள் ஒரு நிகழ்ச்சி சொல்லப்பட வேண்டும்

4 மூன்றாவது வரியில் ஒரு நிகழ்ச்சி சொல்லப்பட வேண்டும் .

5 இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் நேரிடையான தொடர்பு இருக்கக் கூடாது . ஆனால் இரண்டு
நிகழ்ச்சிகளுக்கும் மறைமுகமான ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும்

6 வருணனைகளோ , உவமைகளோ , அலங்காரச் சொற்களோ , தேவையற்ற சொற்களோ
இருக்கக் கூடாது

7 . தமிழ் மொழி இலக்கணத்தில் சொல்லப்படும் அசை, சீர் , தளை போன்றவை தொடர்பான
எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.

எடுத்துக் காட்டாக அந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டிருந்த ,"ஹைக்கூ கவிதை" இது.

உதிர்ந்த அந்த மலர் கீழேவிழாமல்
உயரே கிளம்பிச் செல்கின்றதே .
வண்ணத்துப் பூச்சி பறக்கின்றது.

( கட்டுரையில் கொடுக்கப்பட்டிருந்தது ஜப்பானியர் மொழியில் எழுதப்பட்ட ஹைக்கூ கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு.
இங்கே நான் குறிப்பிட்டிருப்பது அந்த ஆங்கில மொழிபெயர்ப்புக்கான எனது தமிழ்
மொழிபெயர்ப்பு.)

குறிப்பு -2

இவ்வளவு விரிவாக இந்தப் பதிவை நான் எழுதுவதன் நோக்கம் ,"ஹைக்கூ கவிதை" யில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்தத் தகவல் உபயோகமாக இருக்கக் கூடும் என்பதால் தான்

எழுதியவர் : kokilamakan (23-Mar-18, 10:26 am)
பார்வை : 593

மேலே