மனமே மகிழ்ந்துவிடு

வண்ணம் நிறைந்த
வண்ணத்துப்பூச்சி
வலம் வந்து அமர்ந்த அழகை
கொஞ்சம் பார்த்தாயா?

சின்னஞ்சிறு குயிலின் குரலில்
குக்கூவென கூவும்
இசையை செவிகொடுத்து
கொஞ்சம் கேட்டாயா?

மொட்டுகள்
தன் இதழ்கள் விரித்து மெளனமாய்
பூக்கும் புன்னகையை
கொஞ்சம் ரசித்தாயா?

மெல்லிய மழைச்சாரல்
பொழிவில் மெல்லமாய்
நடை நடந்து
கொஞ்சம் நனைந்தாயா?

ஜன்னல் திறந்த நொடியில்
தென்றல் உன்னைத்
தழுவுமே
கொஞ்சம் உணர்ந்தாயா?

வானில் வெள்ளைநிற
பறவைக் கூட்டம்
ஒன்றாகப்
பறக்கும் அழகைக்
கொஞ்சம் பார்த்தாயா?

பிஞ்சுப்பிள்ளை
அது கொஞ்சும் தமிழை
மழலை மொழியில் பேசும் அழகைக்
கொஞ்சம் கேட்டாயா?

இது எதற்கும்
உன் பதில்
இல்லையெனில்...

இதை
ரசித்துத்தான் பாரேன்...

உன்னை
உனக்கே பிடிக்கும்!

உன்
கவலைகள்
கடந்து போகும்!

உன்
வாழ்க்கை
வசந்தமாய்த்
தோன்றும்!

எழுதியவர் : கலா பாரதி (24-Mar-18, 4:32 pm)
பார்வை : 107

மேலே