தாய்க்கு ஒரு தாலாட்டு

தாலாட்டு நான்பாட
தவியாக தவிக்கின்றேன் –உனைச்
சீராட்டி மகிழ்ந்திடவே
உழைத்திங்கே குவிக்கின்றேன்

கருவாக எனைச்சுமந்து –ஒரு
கனிவோடு காத்தவளே
உருப்படியாய் எனைவளர்த்து –இவ்
உலகுக்குத் தந்தவளே ! - தாலாட்டு

நன்றாக நான்தூங்க –உன்
நித்திரையை துறந்தவளே !
துன்பமெனை நெருங்காமல்-உன்
இன்பமெல்லாம் மறந்தவளே - தாலாட்டு

பாசத்தால் கோட்டைகட்டி- எனை
பக்குவமாய் வளர்த்தவளே !
பசிஎடுக்கும் நேரத்திலே – அன்புப்
பாலூட்டி மகிழ்ந்தவளே ! - தாலாட்டு

பட்டினியாய் கிடந்தாலும் –எனக்குப்
பால்சோறு தந்தவளே !
வெட்டியாக அலைந்தாலும் –எனை
வெறுக்காத மனத்தவளே ! தாலாட்டு

உன்இரத்தம் என்றாலும் –உனை
உளம்நோக வைத்திடுவேன்
இன்பந்தான் எனக்கென்று –அதில்
உன்னுள்ளம் மகிழ்ந்திடுமே... தாலாட்டு

எட்டிஉனை மிதித்தாலும் –ஒரு
ஏளனமாய் மதித்தாலும்
விட்டுக் கொடுக்காமல் –எனை
வீரனாக்கத் தவிப்பவளே ! தாலாட்டு ---- 05-02-2018 ------

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (26-Mar-18, 9:23 pm)
பார்வை : 1428

மேலே