ஸ்டீபன் ஹாக்கிங் - பிரபஞ்ச ரகசியத்தின் சாவி

ஸ்டீபன் ஹாக்கிங் - பிரபஞ்ச ரகசியத்தின் சாவி

27/03/2018 அன்று ஸ்டீபன் ஹாக்கிங் புகழஞ்சலி – கருத்தரங்கில் வாசித்த கவிதை
இடம் : தமுஎகச கைலாசபுரம் கிளை, திருச்சி

ஸ்டீபன் ஹாக்கிங்
பிறந்தது பிரிட்டனில்
படித்தது இயற்பியல்
பிடித்தது பிரபஞ்சம்
அவர் மறைவில் பதைத்தது என் நெஞ்சம்

பகுத்தறிவின் உச்சம் விஞ்ஞானம்
விஞ்ஞானத்தின் மக்கள் மொழி பகுத்தறிவு
மக்களுடன் மக்கள் மொழியில்
விஞ்ஞானம் பேசிய பகுத்தறிவுவாதி
மக்கள் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்

அந்த அண்டவியல் ஆசானைப் பாட
பேனா நான் எடுத்த போது
துள்ளி வந்த வார்த்தைகளை
அள்ளி எடுத்துத் தொகுத்த
அஞ்சலிக் கவிதை இது

இயற்கை உபாதைகளுக்குக் கூட
இயங்க மறுத்த உடலைச் சுமந்து
சக்கர நாற்காலியில் சாகசம் செய்தவர்

பொல்லாத நோயொன்று பின்னோக்கி இழுத்தாலும்
நம்மை முன்னோக்கி நகர்த்துவதற்காய்
நுண்ணோக்கி திருப்பியவர்

கொடிய நோயில் குரலை இழந்த போதும்
வானம் தாண்டி விண்வெளியைச் சிந்தித்தவர்
33 ஆண்டுகள் பேசாமல் வாழ்ந்து மறைந்த போதும்
பூமி முழுவதும் அவர் புகழைப் பேச வைத்தவர்

கருவிழி அசைவிலும்
கன்னக் கதுப்பின் துடிப்பிலும் மட்டுமே
பிரபஞ்சப் பேரறிவைப்
புத்தகங்களாய்த் தொகுத்தவர்

கருந்துளைக் கதிர்வீச்சைக்
கண்டறிந்து சொன்னவர்
காலப்பயணம் சாத்தியமென்று
கணித்துச் சொன்னவர்

மனித இனம் தொடர்ந்து வாழ
மாற்றுக் கிரகமொன்று வேண்டுமெனச் சொன்னவர்
கடைசி வரை கடவுள் மறுப்பில் நின்றவர்
கண்மூடி மறைந்தாலும் காலத்தை வென்றவர்
அவர் காலத்தை வென்றவர்

அறிவியல் முரசு கொட்டி
அவர் புகழைப் பாடுவோம்
விஞ்ஞானச் சிறகடித்து
அவர் புகழைப் பரப்புவோம்

எழுதியவர் : செவல்குளம் செல்வராசு (28-Mar-18, 11:45 am)
பார்வை : 124

மேலே