மீசை

வார்த்தை எனும் அம்பை எய்யும்,
நேரெதிராய் ஒட்டியமைந்த வில்லான
அதரத்தின் மேல் நட்டு தொங்கவிடப்பட்ட
கரு ஊசி இலை தோரணமே
பெண்மையின் எதிர்ப்பால் இனத்தின்
கம்பீர கதைப்பிற்க்குஉன்
நுனி தீண்டலால் தாரகை பொலிவு
தரும் வண்ண தூரிகையே
சோறுண்டு உயிரை
காத்தேன் நான்
உன் சோற்றாங்கை பக்கமோ
உயிரை சேர்த்தாய் நீ
நான் உண்டசோற்றில்
உண்மையை உள் நிறுத்தி
பொய்யை மட்டும் இடம் பார்த்து பாயவிட்டேன்
நீயோ இடப்பக்கம்
இனமான மெய்யை மட்டுமே
பாயிட்டு படுக்க வைத்தாய்
அதற்கு சான்று தான்
உன் இடம்வலம் தழுவி
என் இதழ் வழி பிறக்கும்
இழைபட்ட உயிரும் மெய்யும்
கவிஞர்கள் பலர் ஒப்புமைக்கண்டான்
கண்பார்த்த
வானத்திடமும் மேகத்திடமும்
மண்தொட்ட
கடலுடனும் அலையுடனும்
மூக்குணர்ந்த
பூவுடனும் வாசத்துடனும்
ஏனோ சிலர் மறந்தே போனான்
இந்த முகச்சட்டையையும்
அதன் காலரையும்
என் உடல் முளைத்த
இருள் நிற செடிதன்னை
முழுவதாய் ஏரோட்டிய பின்னரும்
வறண்டு போகாத நான்
உன் நிலத்தில் கால்
வைக்கும் போது மட்டும்
அனுமனின் நிமிட அவதாரம்
என் முன் வந்து போக கண்டேன்
ஏனோ
தவிக்கிறேன் விளக்கம் இல்லாமல்
நான் தொட நினைப்பது
இந்த வாய் மேல் ஓடிய சிகையையா
இல்லை அந்த ராமன் தேடிய சீதையையா
என்று
உடலினுள் உள்ள உறுப்பியல்
பூங்காவின் வாயிற்காவலனே
ஏனோ நான்காம் பூதத்தை மட்டும்
வந்து போக அனுமதித்தாய்
நுழைவு கட்டணமே இன்றி
வானவில் தவறவிட்ட நிறத்தை
தனக்குள் மட்டுமே கொண்ட
நீயும் ஒருமுகவில்லே
ஆடும்வறை கண்ணின் நடுவில் வண்ணம் எடுத்தும்
ஆடி அடங்கிய பொழுதில் சற்றே நகர்த்தி வண்ணம்
எடுத்துக்கொள்ளும் உன் எண்ணம் நேர்த்தி
லட்சம் லட்சமாய் சம்பாத்தியத்தில்
வளர்ச்சி எனும் வார்த்தையை
பிறரிடம் இருந்து பெறாத நான்
உன் வளர்ச்சியில்வளர்ந்துட்டானே
என்ற வார்த்தை உலகசெய்தியாய்
என் காதில் ஒலிப்பெருக்க கண்டேன்
காதல் பறவைகள் மட்டும் தான்
ஒன்றை பிரிந்தால் மற்றொன்று உயிர்விடுமா,
சேர்ந்துக்கொள்அவ்வரிசையில்
உனக்கே முதல் இடம் என் சிபாரிசில்
என்னை தர மறந்த இடமெல்லாம்
உன்னை தர மறப்பதில்லை நான்
உயிர்தந்த கடவுளுக்காகவும் சரி
உயிரற்ற கடவுளுக்காகவும் சரி்