செம்புலப்பெயல் நீரார் செப்பியதை கம்பனும், வள்ளுவனும் செப்பினர் t

சங்க இலக்கியத்தில் புகழ்பெற்ற அகத்துறைப் பாடல் செம்புலப்பெயல் நீரார் என்னும் புலவர் யாத்தது. ரிக் வேதம் போலவே, சில தமிழ்ப் புலவர்களின் புகழ்பெற்ற வாசகத்தைக் கொண்டே அப்புலவரை அழைப்பது தமிழிலும் உண்டு. ஒரு செம்மண் தரையில் மழை நீர் விழுந்தால் அது எப்படி இரண்டறக் கலக்குமோ அது போல நாம் ஒன்றுபட்டு விட்டோம்; இனி பிரியமாட்டோம் என்று காதலியிடம் காதலன் சொல்லும் பாடல் அது.



யாயும் ஞாயும் யார் ஆகியரோ

எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே



–குறுந்தொகை 40, செம்புலப்பெயனீரார்



பொருள்:

காதலன் கூறுகிறான்: “என்னுடைய தாயும் நின்னுடைய தாயும் ஒருவருக்கொருவர் எத்தகைய உறவினர்? என் தந்தையும் நின் தந்தையும் எந்த முறையில் உறவினர்? இப்பொழுது யானும் நீயும் ஒருவரை ஒருவர் எவ்வாறு முன்பு அறிந்தோம்? செம்மண் நிலத்தே பெய்த மழை நீர், அம்மண்ணோடு கலந்து அத்தன்மையை அடைவது போல நமது உள்ளங்கள் (தாமாகவே) ஒன்றுபட்டன.



கம்பனும் சொன்னான்

கம்பன், யுத்தகாண்டம், கும்பகர்ணன் வதைப் படலத்தில் சொல்லுகிறான்:-



புலத்தியன் வழிமுதல்வந்த பொய் அறு

குலத்து இயல்பு அழிந்தது கொற்றம் முற்றுமே

வலத்து இயல் அழிவதற்கு ஏதுமை அறு

நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால்



-கம்ப ராமாயணம்



பொருள்

புலத்திய முனிவரின் வழி வந்த குலத்தின் பெருமை உன்னால் அழிந்தது. உனது செயல் நமது வெற்றித் தன்மையை விழ்ச்சி அடையச் செய்யும். அறம் தவறிய உனக்கு வெற்றி கிடைக்குமா? கிடைக்காது. குற்றமற்ற நிலத்தின் இயல்பே நீரினது இயல்பாகும் என்னும் முறைமைக்கு ஏற்றதாக உள்ளது. (இது ராவணனுக்கு கும்பகர்ணன் சொன்ன அறிவுரை)



நிலம் நன்றாக இருந்தால் அதில் விழும் நீரும் நன்றாக இருக்கும்.





வள்ளுவனும் விளம்பினான்

இதையே வள்ளுவனும் விளம்புவது, படித்து மகிழ்வதற்குரியது:-



நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்ப தாகும் அறிவு – குறள் 452



பொருள்

தான் அடைந்த நிலத்தின் தன்மையையே நீரும் பெறும். அது போல மக்களும் எந்த இனத்தாருடன் சேருகின்றனரோ அந்த அறிவையே பெறுவர்.



இதை சிற்றினம் சேராமை என்னும் அதிகாரத்தில் வள்ளுவன் சொல்லுவதால் சத் சங்கத்தின் மஹிமை தெள்ளிதின் விளங்கும்.



இன்னொரு குறளில் செம்புலப் பெயல் நீரார் செப்பியதையே வள்ளுவனும் செப்புவான்:–



புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு

நீரியைந் தன்னா ரகத்து – குறள் 1323



நிலத்தொடு நீர் பொருந்தினாற்போல ஒன்றுபட்ட நெஞ்சம் உடைய காதலனும் காதலியும் ஊடலில் அடையும் இன்பத்துக்குச் சமமான இன்பம் சொர்க லோகத்தில் உண்டோ?

தேவலோகத்தில் SEX செக்ஸ் கூடாது என்று பார்வதி சபித்ததால் அங்கு செக்ஸ் (பாலியல்) இன்பம் கிடையாது (பிற கிரஹங்களில் உயிரினங்கள் உண்டா? என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில்

(Hindus’ Belief in Extra Terrestrial Civilizations) இது பற்றி விளக்கியுள்ளேன்.







காளிதாசனும் மொழிந்தான்!



காதலர்களின் மனம் ஒன்று பட்டதற்கு இப்படி ஒரு உவமையைப் பயன்படுத்தியது போல, சங்க காலத்துக்கு முன் வாழ்ந்த காளிதாசரும் மழை நீர் உவமையைப் பயன்படுத்தியுள்ளார். (காளிதாசன் காலம் பற்றிய எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் அவன் சங்க காலத்துக்கு முந்தியவன் என்பதை நிரூபித்துள்ளேன்)



ஒரே சுவையுடைய மழை நீர் எங்கெங்கு விழுகின்றதொ அந்தந்த நிலத்தின் சுவையைப் பெறுவதுபோல சத்வம் என்ற ஒரே குணமுடைய இறைவன், கைக்கொள்ளும் குணங்களுக்கு ஏற்ப தொழில்களையும் பெயர்களையும் ஏற்கின்றீர் (சத்வ குணம் காரணமாக விஷ்ணுவாகவும், ரஜோ குணம் காரணமாக பிரம்மனாகவும், தமோ குணம் காரணமாக ருத்திரத் தனமையையும் அடைகின்றீர். எப்படி நீர் என்பது ஒன்றுதானோ அதே போல இறைவன் ஒருவனே.

ரசாந்தராண்யேகரசம் யதா திவ்யம் பயோஸ்ச்னுதே

தேசே தேசேகுணேஷு ஏவம் யதாத்வம்அவிக்ரியஹ

— ரகு வம்சம் 10-17



—சுபம்–



’WRITTEN by London Swaminathan

எழுதியவர் : (30-Mar-18, 6:23 am)
பார்வை : 702

மேலே