யுத்தம் இறந்து போ சித்தம் பிறந்து வா --- முஹம்மத் ஸர்பான்

உள்ளதை உள்ள படி சொல்கிறேன்.


என்னை தாலாட்டும் அவளது உதடுகளை காணவில்லை. கறுப்புத் துணியால் கண்களைக் கட்டி நானும் அவளும் விளையாடும் போது அவளது கண்களை தோண்டி விட்டார்கள். இமைகளை களவாடி கல்லறைப் பூச்சிகளுக்கு சட்டை தைத்தார்கள். ஆடைகளுக்கு விடுமுறை கொடுத்து விட்டு அங்கங்களை ஆயுதங்களால் குத்திக் கிழித்தார்கள். திக்கித் திக்கி சுவாசக் காற்று அவளது நாசிக்குள் மீதமுள்ள போது வாளினால் குத்தி இதயத்தை கையில் எடுத்து சக்கை போல் பிழிந்தார்கள். மாலை மங்கும் வானம் நான் உன்னிடம் தாய்ப் பால் இரவல் வாங்கும் நேரம். இப்போது என் உதடுகள் கண்களானது; என் கண்கள் உதடுகளானது. தோட்டாக்கள் ஈக்கள் போல் அவளை மூடியது. நயாகரா அருவியும் கொஞ்சம் சிகப்பாய் மாறிப்போனது. இதுவரை அவள் கட்டித்தந்து நான் தூங்கிய தொட்டிலுக்குள் இன்று அவளை சூடான தேனீர் போல் வடி கட்டுகின்றார்கள்

கர்ப்பப்பைக்குள் கண்ணிவெடி வைத்தார்கள்; தொப்புள் கயிற்றில் காற்றாடிகள் செய்தார்கள். மண்ணைப் போல் கட்டிடம்; கட்டிடம் போல் சடலங்கள் காண்பதும் அரக்கர்களின் அதிசயம். ஒரு டம்பர் தண்ணீருக்காக பத்துத் தலைகள் விலைகள், ஆயுதங்களில் படிந்த புழுதியை இரத்தத்தைக் கொண்டு சலவை, நகங்களை வெட்ட உட்கார்ந்து விரல்களை இழந்த பரிதாபம், சின்னச் சின்ன சிட்டுகளுக்குக் கூட கட்டில் பாடம் நிர்ணயம். மூங்கில்களின் நந்தவனத்திற்கு நெருப்பினால் வெள்ளை அடித்தார்கள்; அங்கத்தின் அளவைப் பார்த்து பெண்மையை விலை பேசினார்கள். நீந்திய மீன்களின் தலைகளை வெட்டிய பின் கடலுக்குள் தூக்கி வீசுவதைப் போல துள்ளித் திரிந்த கால்களை வெட்டி புணர்வாழ்வு தந்தார்கள்.

ரோஜாக்களை பறித்து ஓநாய்களுக்கு மெத்தை செய்தார்கள்; முட்களை மட்டும் எங்கள் தொண்டைக்குள் போட்டார்கள். சதைகளை பைக்குள் போட்டு கூட்டாளிகளுக்கு பங்கு வைத்தார்கள். தந்தையின் தோற்பட்டை உடம்பை விட்டு தனியான போதும் நம்பிக்கை தளராத குழந்தையின் பிடிமானம்; சுடுகின்ற தோட்டாக்கள் மலடி போல் குறி தவறிப் போன வெகுமானம். பூங்கா எங்கும் நாறிப்போன செல்கள்; நாகரீக யுகத்தில் மீதமுள்ள மனிதம். "எப்போதும் நீ எனக்கு ஊட்டி விடுவாய்; புத்தியில் உரைத்து இன்று உனக்காய் ஊட்டி விட வந்தேன்; சோற்றுக்குள் குழம்பை ஊற்றி பிசைந்தது போல அவளை அரைத்து தட்டில் வைத்து என்னை உண்ணச் சொன்னார்கள்" போர்க்களத்தில் ஒரு முட்டாள் கவிஞன் கண்டுபிடித்த பிஞ்சுக் கவிதை.

இமைகளுக்குள் குண்டூசி; தொண்டைக்குள் தீப்பந்தம் குறைந்தபட்ச ஆக்கிரமிப்பு. தாய்ப்பால் ஊட்டிய மார்பை கசாப்புக் கடையில் தொங்கக் கண்டேன். நரமாமிச இறைச்சியை பையில் போட்டு ஐநா வரை போர்க்களப் பேரம் நடந்தது. கழுத்தில் கயிற்றை மாட்டி நான்கு கால்களில் சிறைப்பட்ட மனிதர்களை நடக்கச் செய்து உல்லாசமாய் பொழுதைக் கழித்தார்கள். துண்டு பட்ட அங்கங்களை ஒட்டிக் கொள்ள சிட்டுக் குருவிக் கூட்டிற்குள் வாடகை நிலம் தேடுகிறேன். கண்களை தோண்டி சிலுவைகள் செய்தார்கள்; தொப்புள் கொடியில் மலர்வளையம் வைத்தவர்கள்; கடைசியில், தெருவில் சிதறிக் கிடந்த பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில் காமத்துளி தெளித்தார்கள்.


நியாயங்கள் எல்லாம் கருணைக் கொலை செய்யப்பட்டது. உல்லாசப் பறவைகள் எல்லாம் போர்க்களத்தில் செத்து மடிந்தது. உறைந்து போன உதிரங்களின் நாற்றங்களை சகிக்காமல் நிலவும் மேகங்களுக்குள் மூச்சடைத்து கண்களை இருட்டினால் கட்டிக் கொண்டது. ஒரு பிடிச் சோற்றுக்காய் தவமாய் ஏங்கியது உள்ளங்கள்; கானல் நீரைக் கண்டு பற்களால் நாக்குகளை கடித்துக் கொண்டது தாகங்கள். பூட்ஸ் கால்களுக்குள் சிக்கிக் கொண்ட மண்புழுவாய் மனிதங்கள் செத்துப் போகிறது. நதிகளின் குவளைக்குள் சலவை செய்து ஊற்றப்படுகிறது போர்க்கறைகள். உள்நாட்டுக் காற்று வெளிநாட்டுப் பூக்களிடம் பிச்சை கேட்கிறது. வெளிநாட்டு மெழுகுவர்த்திகள் உள்நாட்டு இருளை நினைத்துப் பார்க்கிறது. பட்டாம்பூச்சி ஓவியங்கள் வரைய வேண்டிய வயதில் கல்லறைக்குள் உறங்கும் நிர்ப்பந்தம். கனவுகள் காணும் முன் சமாதிகள் கட்ட வேண்டிய அவலங்கள். இனியாவது, வானமும் பூமியும் ஒட்டிக் கொள்ளட்டும். புதிதாக தோன்றும் யுகத்தில் யுத்தம் இறந்து போ! சித்தம் பிறந்து வா!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (30-Mar-18, 9:56 am)
பார்வை : 308

மேலே