நிசப்தத்தை விழுங்கிய இரவுகள் - 04

திங்களின் துணைகொண்டு மெல்ல
ஊர்ந்து கொண்டிருக்கிறேன்
மங்கலான என் பார்வையை
இன்னும் மழுங்க செய்கிறது
இந்த இரவு!

மூர்க்கத்தனமாய் என்னை தாக்கிக்கொண்டிருக்கும்
ஒரு பிரிவின் வலியில்
நான் துடித்துக்கொண்டிருக்கிறேன்..

அவள் நினைவுகள் என்னை
கடந்த காலத்திற்குள் கடத்திச்செல்ல
என் கண்கள் நீர்த்திரையிட்டு
நிகழ்கால நிகழ்வுகளை மறைக்கிறது

பகல் பொழுதுகளில் என் பலம் அவள்
இரவுகளில் என் பலவீனம் அவள்

அவள் பேரன்பைச்சொல்ல என் ஆயுள் போதாது
அவள் வசைமொழி கேளா இந்நாட்கள்
என் ஆயுளில் சேராது

என் மக்களுக்கோ வெளிநாட்டில் வேலை
உறவுகளில் நானோ பரம ஏழை

அவள் பெற்றெடுத்த என் செல்வங்களுக்கு
என் மொழியே புரியவில்லையாம்
அவளோ என் மௌனத்தையே
மொழி பெயர்ப்பாள்

என் உத்தமியை பறித்துப்போன மரணத்தை
யுத்தத்திற்கு அழைக்குமென்னை பார்த்து
புத்தி மழுங்கிவிட்டதாய் சொல்கிறார்கள்

நான் எனக்குள் சிரித்துக்கொள்கிறேன்
அவள் எனக்காய் அழுதுகொண்டிருப்பாள்

தன்னிறைவின்றி என்னை தவிக்க விட்டு
முன்னறிவிப்பின்றி அவள் பிரிந்து சென்ற
ஒரு பின்னிரவு வேளையில்தான்
நிசப்தத்தை விழுங்கத் தொடங்கியது
என் இரவுகள்!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (1-Apr-18, 3:33 pm)
பார்வை : 115

மேலே