நல்லிடையன் நகர்- கடிதம் 942018
அன்புள்ள ஜெ
நல்லிடையன் நகர் மன்னார்குடி நகரை புதிய பரிணாமத்தில் காட்டியதுடன் ஆலயங்களைப் பற்றிய அரிய செய்திகளையும் அறிய முடிந்தது. அத்துடன் மன்னார்குடியைப் பற்றிய எனது மலரும் நினைவுகளையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
வைதீக மதங்கள் எழுச்சிப் பெற்ற காலத்தில் ஆலயங்களின் தமிழ் பெயர்கள் வட மொழி பெயர்களாக மாற்றம் பெற்றன. மறைக்காடு வேதாரண்யம் என்றும் மயிலாடுதுரை மயுரம்(மாயவரம்) என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட போது ஜெண்பக மரங்கள் அடர்ந்து காணப்பட்ட மன்னார்குடி, ஜெண்பகாரண்யம் என மாறியதாகவும் என்னவோ அந்தப் பெயர் நிலைக்கவில்லை என்றும் கூறுவார்கள்.
கோயிலை சுற்றியிருக்கும் அந்த நான்கு வீதிகளும் ராஜப்பாட்டைகளாய் திகழ்ந்த காலங்கள் உண்டு. நீங்கள் சுவாமி தரிசனம் செய்த திரு செந்தில் அவர்களின் பூவனூர் இல்லமும் அருகில் இருக்கும் கோட்டுர் இல்லமும் தெருக் கோடீயில் இருக்கும் ஆஞ்சநேயர் ஆலயமும்அந்த வடக்கு வீதியின் நீண்ட கால அடையாளங்கள்.
மன்னார்குடியைப்பற்றி ஒரு நகைச் சுவையான செய்தியும் உண்டு. ஆனால் அது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.அந்நகரில் வணிகராகத் திகழ்ந்த சாரங்கபாணி என்பவர், தனது இல்லத்தில் ஒரு மின்சார சங்கு ஒன்றினை நிறுவி தினமும் மூன்று முறை அதனை ஒலிக்க செய்து வந்திருக்கிறார். மின்சார சங்கு அறிமுகமான காலம் அது. நகராட்சியில் செய்யாததால் தனிப்பட்ட நபராக இதனை செய்து வந்திருக்கிறார். இதனால் அவரை மக்கள் சங்கு ஊதி சாரங்கபாணி என்று அழைத்து வந்திருக்கிறார்கள். இது அவருக்குத் தெரியாது போலும். ஒரு நாள் அவர் முகவரியைத் தேடிவந்த வெளியூர் ஆளொருவன் சங்கு ஊதி சாரங்கபாணி வீடு எங்கிருக்கிறது என்று அவரிடமே கேட்க அதனால் காயப்பட்டுப் போன அவர் உடனே சங்கை தனது இல்லத்திலிருந்து அகற்றி நகராட்சியிடம் ஒப்படைத்துவிட்டதாகவும் கூறுவார்கள்.
அன்றைய ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டத்தின் கல்வி நகராய் விளங்கியது மன்னார்குடி. பின்லே உய்ர் நிலைப் பள்ளி, தேசிய உயர் நிலைப்பள்ளி மற்றும் செயிண்ட் ஜோசப் மகளிர் பள்ளியாகிய மூன்றும் கல்வி,விளையாட்டு மற்றும் இதரத் துறைகளிலும் சிறந்து விளங்கி முழுமையானப் பள்ளிகளாய் விளங்கின. இன்றைய வணிகக் கல்வியின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் முதலிரண்டு பள்ளிகளும் பொலிவிழந்து போக மகளிர் பள்ளி மட்டும் ஓரளவு தாக்கு பிடித்து நின்று கொண்டிருக்கிறது.
தேசிய உயர் நிலைப்பள்ளியின் அருகில் இருக்கும் ஒத்தைத் தெரு பிள்ளையார் கோவில் மாணவர்களிடையே அன்று மிக பிரபல்மாக இருந்தது. தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் அந்த கோவிலுக்கு செல்லாமல் செல்ல மாட்டார்கள். அன்று வி நா யகருக்கு சிவப்பு மாலை அணிந்திருந்தால் வினாத் தாள் கடினமாக இருக்கும் என்றும் வெள்ளை மாலை அணிவித்திருந்தால் எளிமையாக இருக்கும் என்று திடமாக நம்பியவர்களில் நானும் ஒருவன்..
தேசிய உயர் நிலைப் பள்ளியிலிருந்து பின்லே உய்ர் நிலை பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு ஹோட்டல் உண்டு. மிகவும் மோசமாக பராமரிக்கப்பட்ட ஒரு ஹோட்டல். அதனால் அதனை காலரா ஹோட்டல் என்றே அனைவரும் அழைத்து வந்தார்கள்.. சாப்பிட்டால் காலரா நோய் வந்து விடுமாம்.. அப்படியிருந்தும் அருகில் வேறு உணவு விடுதிகள் இல்லாத காரணத்தால் அங்கே கூட்டம் அலை மோதும்.. காலரா ஹோட்டலில்தான் சாப்பிட்டு வந்தேன் என்று மக்கள் இயல்பாக பேசிக் கொள்வார்கள்!
மன்னார்குடியில் பெரியார் அவர்கள் கூட்டம் ஒன்றில் பேசியது இன்னும் என் நினைவில் இருக்கிறது. ” இந்த பாப்பானை எல்லாம் பாரு. எல்லா ஊரிலேயும் தெக்கு வீதியில்தான் குடியிருப்பான். ஏன்னா சாமி பொறப்பாடு எட்டு மணிக்கு ஆரம்பிச்சா பத்து மணிக்குள் தெக்கு தெருவை கடந்து போயிடும். அவன் பத்து மணிக்கு தூங்கப் பொய்டுவான். இந்த மேல வீதியில் இருக்கறவனும் வடக்கு வீதியில் இருக்கறவனும் ராத்திரி மூனு மணி வரைக்கும் கண்ணு முழிச்சு சாமி எப்போ வரும்னு காத்துட்டு இருப்பான்.. காலையிலே போய் ஒழுங்கா தொழில் பாக்க முடியாது. இப்படித்தான் பாப்பான் நம்மளையெல்லாம் ஏமாத்திட்டு இருக்கான்.. இந்த முட்டா பசங்களுக்கு அது புரிய மாட்டேங்குது..” அந்த பேச்சை கேட்ட பின் நான் எல்லா ஊரிலேயும் கவனிச்சேன்..தெற்கு வீதியில்தான் அவர்கள் குடியிருந்தார்கள்.. பெரியார் சொன்னது உண்மைதானோ .. எனக்கு புரியவில்லை..( நான் திராவிட இயக்கங்களை சார்ந்தவனோ பெரியாரின் கொள்கைகளில் உடன்பாடு கொண்டவனோ இல்லை)
இப்படி என்னுள் உறங்ககிக் கொண்டிருந்த பல நினைவுகளை தட்டி எழுப்பிய நல்லிடையன் நகருக்கு நன்றிகள் கோடி
கொ.வை.அரங்கநாதன்