வந்தனா புனே மஹாராஷ்டிரா

வக்த் பி தெஹ்ரா ஹே
கெய்சே க்யோன் யே ஹுவா
காஷ் து எய்ஸ்செ ஆயே
ஜய்சே கோய் துஆ
து ரூஹ் கி ராஹத் ஹே
து மேரி இபாதத் ஹே....
ஸ்ரேயா பாடப்பாட
அவளும் நானும்
ஒருவர் விழியை ஒருவர்
துடைத்த நாட்கள்....
நீ பிரிந்தாய்...வந்தனா...
தனித்தவன் என்னுள்ளும்
தனித்து சிதைந்தேன்.
நீண்ட வாழ்க்கையில்
ஒரு புள்ளி தவறியதால்
கோலம் திருகி கொண்டது.
அவர் நினைவு வந்தது.
அன்றே சந்தித்தேன்.
கண்ணாடி குடுவை
ஒன்று தந்தார்...
வெறும் குடுவை. நீயும்
அப்படியே வைத்திரு என்றார்.
கிளம்பி வந்தேன் அறைக்கு.
பகல். நடுப்பகல்.
மங்கிய வெளிச்சம் அறையில்.
முன் வைத்து அமர்ந்தேன்.
குடுவை இருந்தது.
நேரம் கடந்தது.
ஒரு ஈ மேலே பறந்தது.
இரு எறும்புகள் சுற்றின.
வேறு இல்லை.
அவர் வந்தார்.
வெறும் குடுவை பார்த்தார்.
கண்ணை மூடிக்கொள்...
மூடினேன். தெரிந்தது.
வெறும் குடுவை அல்ல.
காற்று இருந்தது.
காற்று அசைய ஈரம்.
ஈரம்...மேகம்.மழை வர
வனம்.உயிரினம்.
பிரபஞ்சம். வாழ்க்கை.
குடுவையில் என் மனம்
மிதக்க...மனதில்
குடுவை மிதந்தது.
நான்,நீ,அவன்,அவள்,அது.
கோபம், வன்மம், இரக்கம்.
தொடல்,பார்த்தல், காதல்.
காதல்.நான்.அவள்.
மேரே ரஸ்க்கே கமர் துனே பெஹ்லி நசர்
ஜப் நசர் சே மீளெய் மஜா அஅகயா...
சோனு கக்கர் பாடப்பாட
அவள் என் கண்ணை
துடைக்கின்றாள்.
சட்டென விழித்தேன்.
இருந்தது எதுவும் இல்லை.
அறையில் இருந்த என்னில்
அறை இருந்தது என்னுள்.
காதல் என்பது பிரபஞ்சம்.
பெண் ஒரு சாதனம்.
வந்தவர் போய் விட்டார்.
நழுவி விழுந்தது அறை
என்னிடமிருந்து.

எழுதியவர் : ஸ்பரிசன் (15-Apr-18, 1:20 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 181

மேலே