சந்ததிகள் காதலிக்க

அத்த ராத்திரியை
அடகு வைத்து
மீண்டபடி - உன்
பேருந்து பயணம்
நீ பயணப்பட்ட பாதையில்தான்
எனது இன்றைய மறியல்
சன்னலோர இருக்கையில்
சர்க்கரையாய் நீயிருக்க
எறும்புகளோடு நானும்
பேருந்தை மறித்து
கோஷமிட்டுக் கொள்கிறேன்
காதலி உன்பெயரை அல்ல
காவிரி அவள் பெயரைத்தான்
பழுத்தும் உலர்ந்ததுமான
பலா இலை நாக்கால்
பச்சை பச்சையாய்
பஞ்சமிலா வார்த்தைகளால்
வஞ்சத்தோடு திட்டுகிறாய்
தடைபட்டுப் போன பயணத்திற்கு
தரங்கெட்ட மனிதரென
சன்னல் கம்பிகளுக்கும்
பாடம் நடத்துகிறாய்..!
நொடிதாண்டி நிமிடமாகிறது
கைக்கடிகாரம் பார்த்து பார்த்து
கடிந்துக் கொள்கிறாய்..!
கோபப்பட்டு வீதிக்கு வந்த என்மேல்
கடுஞ்சாபம் வீசுகிறாய்
கொந்தளித்த உள்ளம் வைத்து
தத்தளித்து நிற்பவளே..!
நீ போறதெங்கே பயணம்
பத்து நிமிட பயணத்தில்
பக்கத்து ஊருக்குத்தானே..!
படபடத்துப் போறவளே
படையெடுத்த காரணம் கேளு
ஒலிகள் காற்றிடம் வைக்கும்
கோரிக்கைகளென ஒதுங்காதே
இறங்கி வந்து போராடு
உடை போல் கடமை செய்
உரிமை உனக்கும் உள்ளது
உள் நாக்கின் தாகத்தை
உமிழ் நீர்கள் தீர்க்காது
வா.. கோஷமிடு சொல்லித்தருகிறேன்
"வேண்டும் வேண்டும்
காவிரி வேண்டும்"
ஏன் மொளனி மொளனம்
கோஷமிடுபவர்கள்
வாயைப் பார்
எச்சில்கள் சிறகடிப்பதைப் பார்
குரல்வளையைப் பார்
குரல்கள் போராடுவதைப் பார்
காவலர்கள் தாக்குவதைப் பார்
எங்கள் உடல்கள்
பூமிக்கு இரத்ததானம்
செய்வதைப் பார்..!
எனது போராட்டம்
இந்த பூமிக்காகத்தான்
பூமியில் வாழப்போகும்
உன் சந்ததிகளுக்காகத்தான்
நான் போராடி செத்துப்போகிறேன்
உன் மடி குழந்தை
மரணிக்காமல் வாழ்ந்தால் போதும்
என் மரணம் உன் சந்ததிகளுக்கு
நல்ல நீர் நல்ல காற்று நல்ல நிலம்
எல்லாமும் தரும்
பெண்ணே..!
உன்னை மட்டும் - நான்
நேசிப்பதும்
நீ மட்டும் என்னை
நேசிப்பதுமல்ல காதல்
இருவருமாய் இணைந்து
பூமிதாயையும் நேசிப்பதுதான்
காதல்..
நம் சந்ததிகள் நளை காதலிக்க..!