தேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி17

" பாட்டி! இங்க இராகவன் என்று ஒருவர் இருந்தாரே.
அவரைப் பற்றி சொல்ல முடியுமா? ", என்று கனிந்த குரலில் ஆரம்பித்தான் அசோக்.

" யாரப்பா நீ? முத்தையா மகன் இராகவனைப் பற்றியா கேட்கிறாய்? ", என்று வெற்றிலை குதப்பிக் கொண்டே சுதாரித்தாள் கருப்பாயி பாட்டி.

" ஆமா பாட்டி, அவரே தான். நாங்க அவரைப் பற்றி தெரிஞ்சுக்க ரொம்ப தூரத்துல இருந்து வந்துருக்கோம். ",என்றான் சிவா.

சிறிது மௌனமான கிழவி வெற்றிலையால் சிவந்த எச்சிலைத் துப்பிவிட்டு, " சொல்கிறேன் கேளுங்கப்பா. ",என்று தொடங்கினார்.

" முத்தைய்யா, பெயருக்கேற்ப முத்துப் போல் குணம் அமைந்த முத்தைய்யா.
விவசாயமே முதற்கண்ணாகக் கொண்டு வாழ்ந்தார்.
அவருடைய மனைவி சிவகாமி. லட்சுமியின் அவதாரம் போல், சரஷ்வதியின் கல்வி ஞானம் கொண்ட அன்பானவர்.
அவர்களுக்குப் பிறந்தவன் தான் இராகவன்.
சிறுவயதிலேயே நற்பண்புகளை தன் தாய் தந்தையிடம் கற்றவன்.

இராகவனுக்குப் பத்து வயதிருக்கும்.
அப்போது, பள்ளி விழாவில் நல்ல மாணவன் என்ற பரிசை வாங்கிக் கொண்டு தன் அம்மாவைக் காண வீட்டினுள் நுழைந்தான்.
அங்கு எல்லாம் அழங்கோலமாக கிடக்க, அவனது அம்மா கழுத்தறுப்பட்டு கிடைப்பதைக் கண்டு கதறி அழுதான்.
பிறகு எழுந்து வந்து என்னை அழைத்துப் போய் காட்டினான்.
எனக்கு அழுகை அடங்காத அளவிற்கு வர, இராகவனோ, "அம்மா எழுந்திரிங்க. நான் பரிசு வாங்கிட்டு வந்திருக்கேன் மா. ",என்று கதறி அழுதான்.

" உங்க அம்மா எழுந்திரிக்க மாட்டாங்கப்பா. ",என்று எவ்வளவோ கூறியும் அவன் சமதானம் ஆகவில்லை.

முத்தைய்யா அங்கு வந்து நிலைமையைக் கண்டு குழந்தை போல் அழுதார்.
காவல்துறையினரை அழைத்துக் கொண்டு ஒரு இளம் பெண் அங்கு வந்தாள்.
அவள் காவல்துறையினரிடம் நடந்ததை விளக்குவதுபோல் தெரிந்தது.
அதன் பின் காவல்துறையினர் அங்கிருந்து சென்றிட, சிவகாமி அம்மாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

அதே நேரம் முத்தைய்யா தன் மனைவி சாவிற்கு காரணமானவர்கள் பழிவாங்க எண்ணினார்.
அந்த பெண்ணிடம் வந்தவர்களைப் பற்றிய தகவல் கேட்க, அவளை துரத்தி வந்தவர்களின் பெயர்களைச் சொன்னாள்.

கோபத்தோடு முத்தைய்யா வீட்டைவிட்டு வெளியேறினார்.
திரும்பி வந்தபோது உடம்பெல்லாம் இரத்தக்கறை.
பின்னாலேயே காவல்துறையினர் வந்து அழைத்துச் சென்றார்கள்.
நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை என்று முடிவானது.
நீதிமன்றம் விட்டு வெளியே வந்த முத்தைய்யா தன் மகன் இராகவனை நினைத்துக் கவலைப்பட்டார்.
அந்த இளம்பெண் இராகவன் தான் பார்த்துக் கொள்வதாக வாக்களித்தாள்.
கடைசியாக முத்தைய்யா தன் மகனிடம், " சத்தியத்திற்காக, தூய அன்பிற்காக உன் உயிரைக் கொடுக்கவும் தயங்காதே. ",என்று கூறியவர் தன் மகனை நெஞ்சில் அணைத்து தன் உயிரைத் தன்னுடல் விட்டு நீக்கினார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பைவிட அவர் மனசாட்சியின் தீர்ப்பு முந்திக் கொண்டது.
முத்தைய்யாவிற்கு இறுதி காரியம் முடிந்த பிறகு அந்த இளம்பெண் இராகவனை அழைத்துக் கொண்டு என்னுடன் புறப்பட்டார்.

இங்கு ஒருமாதம் கூட தங்கி இருக்கவில்லை.
காரணம் இராகவன் தன் தாய் தந்தையை நினைத்து அழுது கொண்டே இருந்தான்.
அதனால், அவனை இங்கிருந்து அழைத்துக் கொண்டு சென்றுவிட்டாள்.
அதன் பிறகு நான் அவர்களைப் பார்க்கவில்லை. ",என்று பாட்டி முடித்தார்.

" அவர்கள் எங்கே சென்றார்கள் என்று தெரியுமா? ",என்றான் சிவா.

" அவர்கள் எதுவும் சொல்லவில்லை தம்பி. ",என்றார் பாட்டி.

" ரொம்ப நன்றி பாட்டி. நாங்க புறப்படுகிறோம். ",என்று பாட்டியை வணங்கிவிட்டு சிவாவும் அசோக்கும் கிளம்பினார்கள்.
அவ்வூரில் வேறு யாருக்கும் அவ்வளவாக இராகவனைப் பற்றித் தெரியவில்லை.

சிவாவும், அசோக்கும் தாங்கள் கொண்டுவந்த தகவலை ஜெகனிடம் கூறிட, ஜெகன் காவல்துறை தலைமையிடம் பேசி இராகவன் தன் வசம் கொண்டு வந்தார்.

ஜெகன் இராகவனை கைதி போலவோ, விரோதி போலவோ, தீவிரவாதி போலவோ பாவிக்கவில்லை.
அவனை தன் குடும்பத்தில் ஒருவனாக அழைத்துச் சென்றார்.

அங்கு அன்பின் சந்நிதானம் வந்ததாக உணர்ந்தான் இராகவன்.
அவனுக்குள் மாற்றங்கள் உதயமாயின.

மாமா என்றழைக்கும் ஜெகனின் குழந்தைகள்.
எப்போதும் அக்குழந்தைகளோடு விளையாடுவான் இராகவன்.
தம்பி என்று அழைத்திடும் ஜெகனின் மனைவி.
இப்படி அன்பில் கரைந்து போன இராகவன் தன் மனம் திறந்து பேச வேண்டிய நாள் வந்தது.

அன்று ஜெகன் புறாக்களுக்கு இரையிட்டுக் கொண்டிருந்தார்.
அங்கு வந்த இராகவன் அமைதியாக அமர்ந்தான்.

குழந்தை புன்னகையோ அழகான மலர்களைப் பறித்து வந்து நீட்டின.
வாங்கிக் கொண்ட இராகவன், ஜெகனிடம், " அன்பில்லா உலகம் என்று அழிக்கவே நினைத்தேன். அன்பு இருக்கிறதடா, அதை நீ உணரவில்லையடா என்று புரியவைத்து விட்டீர்கள். ",என்று கண்கள் கலங்கிய இராகவனை அணைத்துக் கொண்ட ஜெகன், " நடந்தது என்ன? ",என்று கேட்டார்.

" சொல்கிறேன். பெற்றோரை இழந்த எனக்கு அந்த சகோதரி தாய், தந்தையாக வந்தாள். ஊரைப் பிரிந்து வெகுதூரம் வந்த நாங்கள் ஒரு ஊரில் அவருக்கு சொந்தக்காரர் இருந்ததால் அங்கு தங்கிட, என் படிப்பிற்காக ரொம்ப கஷ்டப்பட்டார்.
நானும் நன்றாகப் படித்து அவர் பாராட்டைப் பெற்றேன்.
எனக்கு பதினேழு வயதான போது, அங்கு மதக் கலவரம் ஏற்பட்டது.
அதில் மூஸ்லிம் மதத்தவர்கள் அடங்கிய கும்பலில் நாங்கள் சிக்கிக் கொண்டோம்.
அப்போது என்னை பணயக் கதியாக்கி என் சகோதரியைக் கற்பழித்தார்கள் என் கண்கள் முன்பாகவே.
கோபத்தில் தாக்க முற்பட்ட என்னை தலையில் அடித்து மயக்கமடைய வைத்தார்கள்.
நான் கண் விழித்து பார்த்த போது என் சகோதரி பிணமாகக் கிடந்தாள்.
கதறி அழுத என்னை இந்து இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆறுதல் கூறித் தேற்றினார்கள்.
அத்தோடு மூஸ்லீம்கள் மீதான வெறுப்பு என்னில் முளைவிடத் தொடங்கியது.
ஒரு சாமியாரின் உதவியால் நான் மேலும் படித்தேன்.
அதோடு பிரதமர் மூஸ்லீம்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்.
அவரைக் கொல்ல வேண்டும். அதற்காக பிறந்தவனே நீ. என்று என்னில் வெறி ஏற்றினார்கள்.
அந்த வெறியின் உச்சமே என்னையே ஆயுதமாக மாற்றக் காரணம். ",என்று முடித்தான்.
அவன் கண்கள் ஈரமாயிருந்தன. அது உண்மையின் அத்தாட்சியாயிற்று.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (22-Apr-18, 6:31 pm)
பார்வை : 148

மேலே