கைதி எண் 00000

எனக்கு ஜாதி உண்டு
மதம் உண்டு.
இனம் நாடு கொடி உண்டு
பகை தேசம், பகைவர் உண்டு.
எனக்கு பெயர் உண்டு.
பலவிதத்தில் நீளமாய்
இலக்கங்கள் கூட உண்டு.
இதில் ஒன்றும் நானே
ஸ்வீகரித்ததல்ல.
சொன்னார்கள்.
சூட்டினார்கள்.
வழங்கினார்கள்.
பின் அனுப்பி வைத்தனர்.
எனது நிர்வாணம் அழகானது.
அதை மறைத்தார்கள்.
எனது காமம் நேர்மையானது
அதை சபித்தார்கள்.
எனது சிந்தனை கூரானது.
அதை மழுக்கினார்கள்.
எந்த பிழைப்புமற்ற என்னிடம்
வரிகள் பிடுங்கப்பட்டன
மானின் அடிவயிற்றில்
சிகை பிடுங்குவது போல.
வருடங்கள் செல்லச்செல்ல
சான்றிதழ் தந்தனர்
எல்லாக்கல்விக்கும்.
எல்லா அடிமைதனத்திற்கும்...
அடுக்கி வைத்தும்
துடைத்து வைத்தும்
காத்திருக்கிறேன்
மரண சான்றிதழ் பெற...

எழுதியவர் : ஸ்பரிசன் (7-May-18, 7:36 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 62

மேலே