புலன் மீறியதாய்

புலன் மீறியதாய்
(இந்தப் படைப்பு கடவுள் தொடர்பாக எழுதப்பட்டதாகப் புலப்படலாம்.
நான் நாத்திகனும் இல்லை. ஆத்திகனும் இல்லை. எனக்குத் தெரியாது
என்னும் வகை (agnostic க்குத் தமிழ்?). அண்டத்தின் ஆற்றலை வியக்கும்
என் உணர்வாகக் கொள்வது பொருத்தம்).

கண்ணுக்குத் தெரியாத காட்சி
கனவுகளில் ஊடுருவிய கோலம்
தொட்ட போது உணரமுடியாத
திட திரவ ஆவி மீறிய ஒரு நிலை
நாசிக்கு மீறி புதுப் புலன் காட்டும்
நறுமணத்தின் எல்லைமீறிய
சுவாச சம்பந்தம். மூச்சுக்கு பதில்!
செவிச் செல்வம் தலையென்றால்
இது செவிச் செல்வத்துக்குத் தலை.
காது வழி புகுவதறியாது பரவி
காயம் முழுதுணரும் புதுப்பாவால்
குதூகலப் பொழிவு அப்பப்பா!
பெயரில்லை! அழைக்கவில்லை!
அருகில்லை! தொலைவிலில்லை!
அறிந்த சுவை தாண்டி நின்று
ஏழாம் வகைச் சுவை நா மீறி!
சொல்லில் சொல்ல முயற்சித்து
இந்த மொழிகளால் தோற்று
நீட்டல் அளவைக் கணக்கிட
முகத்தல் அளவு கோல் பயனற
நீட்டல் என்பதும் கற்பனையாக
நிஜமென ஒன்று என்னைமீறி!
அதைக் கட்டித் தழுவிக் காமுறவும்
தூக்கிக் கொஞ்சி சுகப்படவும்
கைகோத்துக் கதைத்துக்
கண்ணீர் விடவும் சிரிக்கவும்
நட்பில் கதகதக்கவும் பதைபதைக்கவும்
தோதில்லாத தொட்டில் மீறிய
கட்டில் மீறிய, உடுக்கை தாங்கும்
கை மீறிய ஒன்று, ஒருவன், ஒருத்தி-
மீண்டும் வார்த்தை வற்றிவிட்டது!
எனக்கும் உனக்கும் வேறானதால்
யாரிடமும் எப்படியும் பகிரமுடியாத
அனுபவம் வாழ்வது வலிக்குமல்லவா?
சுகானுபவம் அமுதப் பொழிவு!!!

எழுதியவர் : திருத்தக்கன் (8-May-18, 11:06 am)
சேர்த்தது : திருத்தக்கன்
பார்வை : 499

மேலே