அவனும் நானும்-அத்தியாயம்-06

....அவனும் நானும்....

அத்தியாயம் : 06

வீட்டிற்குள் நுழைந்த மறுநொடியிலிருந்தே கோவிலில் கண்ட பெண்ணைப்பற்றிய பேச்சுத்தான் அன்று முழுவதற்குமே சீதாவின் வாயிலிருந்து வந்து விழுந்து கொண்டிருந்தது...எதைத் தொடங்கினாலும் இறுதியில் அந்தப் பெண்ணிலேயே வந்து நின்றதில் ராம்குமாரிற்கு ஒன்று மட்டும் தெளிவாயிற்று,சீதாவிற்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்துவிட்டதென்பது...

"ஆமா வந்ததில இருந்து அந்தப் பொண்ணு அந்தப் பொண்ணு என்குறியே...அந்தப் பொண்ணுக்கு பெயர் இல்லையா...??..."

அப்போதுதான் சீதாவிற்கும் தாம் அவளது பெயரைக்கூட கேட்காமல் வந்துவிட்டோமே என்பது உறைத்தது...

"நானும் அந்தப் பொண்ணைப்பத்தி எல்லாமே தெரிஞ்சுக்கனும்னு நினைச்சிட்டு,கடைசியல பெயரைக்கூட கேட்காமல் விட்டிட்டேன்...அடுத்த தடவை சந்திக்கும் போது எல்லாத்தையுமே எப்படித் தெரிஞ்சுக்கிட்டு வாறேன்னு மட்டும் பாருங்க.."

"உன்னோட பேச்சைப் பார்த்தால்,உன் மனசில வேற என்னமோவும் ஓடுது போல இருக்கே..??.."

"வேற என்ன ஓடப்போகுது...எல்லாம் நம்ம கார்த்திக்கோட கல்யாணம்தான்...அது என்னமோ தெரியல இந்தப் பொண்னை பார்த்ததுமே நம்ம பையனுக்கு ரொம்ப பொருத்தமாய் இருப்பாள்னு தோனிச்சு...உண்மையிலேயே ரொம்ப நல்ல பொண்ணு..."

"நீ சொல்றதை வைச்சுப் பார்க்கும் போது பொண்ணு ரொம்ப நல்ல மாதிரித்தான் தெரியுது...நீ அடுத்த தடவை அந்தப் பொண்ணைப்பத்தி முழுமையாத் தெரிஞ்சுகிட்டு வா...அதுக்கப்புறம் மத்ததுகளைப்பத்தி யோசிக்கலாம்...அதுவரைக்கும் இந்தப் பேச்சை அவன் முன்னாடி மட்டும் பேசி வைச்சிராத..."

"ம்ம்...சரிங்க...கோவில்ல வைச்சு அந்தப் பொண்ணை பார்த்தாலே என்னவோ...எல்லாம் நல்லதாவே நடக்கும்னு என் உள் மனசு சொல்லுது...அதே மாதிரியே நடந்திட்டால் சந்தோசம்தான்.."என்றவாறே நறுக்கி முடித்த காய்கறிகளோடு சமையலறைக்குள் நுழைந்து கொண்டார் சீதா...

சீதாவின் மனதில் என்ன இருந்ததோ அதேதான் ராம்குமாரின் மனதிலும் தோன்றியது...ஆனால் மனம் வைக்க வேண்டியவனோ திருமணம் என்ற சொல்லையே வெறுப்பவனாகவல்லவா இருக்கிறான்...அவனின் மனம் இனியாவது மாறிவிட வேண்டுமென்று எண்ணிக்கொண்டவர்,நண்பர் ஒருவரைச் சந்திப்பதற்காய் வெளியே செல்லத் தயாரானார்...அப்போது சீதாவின் குரல் சமையலறையில் இருந்தவாறே அவரை மீண்டும் இடை மறித்தது...

"ஏங்க...நான் கோவிலால வந்திட்டேன் என்குறதை கார்த்திக்குக்கு சொல்லச் சொன்னேனே..சொல்லிட்டீங்களா...??.."

"அதை நீ வந்ததுமே சொல்லிட்டேன்...நீ கோல் பண்ணப்போ மீட்டிங்ல இருந்தானாம்,அப்புறம் பார்த்தப்போ புது இலக்கமாய் இருந்ததால அப்படியே விட்டுட்டேன்னு சொன்னான்..."

"ஏன் புது இலக்கம்னா,மறுபடியும் கோல் பண்ணி என்ன ஏதுன்னு கேட்கமாட்டானாமா..??.."

"ஏன்டி தெரியாத நம்பர்..தேவைன்னா அவங்களே மறுபடியும் எடுப்பாங்கன்னு விட்டிருப்பான்...அவனே இப்போதான் கொஞ்சம் இறங்கி வாறான்...நீ மறுபடியும் அவனை உச்சத்துக்கு கொண்டுபோய் விட்டிடுவாய் போலயே..."

"ஆமா எனக்கு மட்டும் அவன் உச்சத்திலேயே நிக்கனும்னு ஆசை பாருங்க.."என்று சேலை முந்தானையில் கைகளைத் துடைத்தவாறே வெளியே வந்தவர்,

"அவன் மட்டும் வந்திருந்தால் அந்தப் பொண்ணையும் அவனுக்கு அப்படியே அறிமுகப்படுத்தி வைச்சிருப்பேன்...எங்க நாம நினைக்குற ஒன்னும்தான் நடக்கவே மாட்டேன்குதே..."

"அது சரி..நீ சொன்னதும் அவன் அப்படியே கையைக் குலுக்கி அந்தப் பொண்ணுக்கு வணக்கம் வைச்சிட்டுத்தான் மறு வேலை பார்த்திருப்பான்...முதல்ல நீ ஒழுங்கா அந்தப் பொண்ணுகூட அறிமுகமாகிட்டு வா...அதுக்கப்பும் பொறுமையாய் அவனுக்கு அறிமுகப்படுத்தலாம்..."

"நீங்க சொல்றதும் சரிதான்...அந்தப் பொண்ணும் ஒவ்வொரு வெள்ளியும் அம்மன் கோவிலுக்கு வவருகிறதா சொன்னாள்...அடுத்த முறை கண்டிப்பாய் வீட்டுக்கே கூட்டிட்டு வந்து உங்களுக்கே நேரடியாய் அறிமுகம் செய்து வைக்குறேன்..."

"ஒவ்வொரு வெள்ளியும் வாறதா சொல்லுற...அப்போ இதுக்கு முன்னாடி நீ அந்தப் பொண்ணைப் பார்த்ததில்லையா..."

"இல்லையேங்க...அன்னைக்குத்தான் முதற்தடவையாய் பார்த்தேன்...நம்ம வாழ்க்கையில் யாரை எப்பப்போ எப்படி சந்திக்கனும்னு இருக்கோ,அதன்படிதானே எல்லாம் நடக்கும்..அதேமாதிரிதான் இதுவும்...அன்னைக்குத்தான் அந்தப் பொண்ணை நான் சந்திக்கனும்னு இருந்திருக்குப் போல..."என்று மனதாரச் சொல்லிக்கொண்டிருந்தவருக்கு,அவளை மீண்டும் சந்திக்கும் தருணம் துயரமானதொரு சம்பத்தில்தான் அமையப்போகிறதென்பது தெரிந்திருக்கவில்லை...

அன்று இரண்டு விளம்பரங்களுக்கான ஷீட்டினை முடிக்க வேண்டியிருந்ததால்,கீர்த்தனா மிகவும் பரபரப்பாய் செயற்பட்டுக் கொண்டிருந்தாள்...ஆனால் எப்போதும் அவளிடத்திலிருக்கும் சுறுசுறுப்பு அன்று அவளிடத்தில் காணாமல் போயிருந்தது... வேலையென்று வந்துவிட்டாலே அவளின் சிந்தை முழுதுமே அவள் செய்யும் வேலைக்குள் மட்டுமாகத்தான் முழ்கியிருக்கும்...ஆனால் முதற்தடவையாக அவளது கவனம் முழுவதையும் பணிக்குள் செலுத்த முடியாது தடுமாறிக் கொண்டிருந்தாள்...அதற்குக் காரணமாய் முந்தைய இரவில் அஸ்வின் மீண்டும் அவளது திருமணப் பேச்சை ஆரம்பித்ததுவே காரணமாக இருந்தது..

ஆனந்திடம் அவளின் வாழ்க்கையின் கடந்த காலங்களில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள முடிந்த அவளால்,அஸ்வின்னிடம் ஏனோ சொல்ல முடியவில்லை...அவளின் மனதின் சோகம் அறிந்தால் நிச்சயமாய் அவன் அதைத் தாங்கிக் கொள்ள மாட்டான் என்பதாலேயே அவனிடமிருந்து அவள் அனைத்தையும் இன்றுவரையிலும் மறைத்தே வைத்திருக்கிறாள்...

நேற்றைய இரவில் அவளுக்கும் அஸ்வின்னுக்குமிடையே பெரிய போராட்டமே நிகழ்ந்து முடிந்திருந்தது...அவள் திருமணம் செய்து கொள்ளவில்லையென்றால் தானும் திருமணம் செய்யப்போவதில்லையென்பதை அவன் மிகவும் உறுதியாகக் கூறியது வேறு அவளின் மனதையும் வெகுவாய் ஆட்டிப் பார்த்தது...இதில் அவனது காதலையே அவளிற்காய் அவன் தள்ளி வைத்திருக்கிறான் என்பது மட்டும் அவளிற்குத் தெரிந்திருந்தால் அவளின் தலையே வெடித்துச் சிதறியிருக்கும்...

அதற்குமேலும் தலையில் குடியேறிக் கொண்ட பாரத்தைப் பொறுக்க முடியாமல் திண்டாடியவள்,ஆனந்திடம் ஷீட்டைப் பார்த்து முடிக்கும் படி கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டாள்...இருந்த குழப்பத்தில் அவளின் ஹான்ட் பாக்கையும்,அலைபேசியையும் அங்கேயே விட்டுவிட்டு வந்திருந்தாள்..

அவள் ஏதோ குழப்பத்தோடு இருப்பதைப் புரிந்து கொண்ட ஆனந்தும் அவளிடம் என்ன ஏதென்று கேட்டுக் கொள்ளவில்லை...அவள் எப்போதெல்லாம் தடுமாற்றம் கொள்கிறாளோ,அப்போதெல்லாம் அதற்கான காரணம் என்னவோ ஒன்றுதான்...அதை அவனுமே அறிந்து வைத்திருப்பதால்தான் அவளாகத் தெளியும் வரை அவனும் அவளை அப்படியே விட்டுவிடுவதும்...இன்றும் அதே போலவே அவளை அவள் போக்கிற்கே விட்டவன் வேலையில் முழுக் கவனத்தையும் பதித்துக் கொண்டான்...

ஆனால் அவன் கவனத்தை திசைதிருப்பும் வகையில் கீர்த்தனாவின் அலைபேசி அலறியது...ஒருவருக்கு வரும் அழைப்புகளை மற்றவர் எடுக்கக்கூடாதென்ற விதி எல்லாம் அவர்களுக்குள் இல்லாததால் அவனே அவ் அழைப்பிற்குப் பதிலளித்தான்..

"ஹலோ ஆனந் கியர்..."

ஆனால் மறுபக்கத்திலிருந்து எந்த பதிலுமே வரவில்லை...சிறிது நேர மௌனத்திற்குப்பின் அழைப்பும் துண்டிக்கப்பட்டது...யாரென்று திரையை நோக்கியவனிற்கு அதில் அவ் இலக்கம் சேமிப்பில் இல்லையென்றதும்,அவனும் அவ் தொலைபேசி அழைப்பைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் வேலையைத் தொடர்ந்தான்...

அறைக்குள் வந்து கதவைச் சாத்திக் கொண்டவள்,தேநீருக்குச் சொல்லிவிட்டு இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்...கண்களிரண்டை மூடியதுமே அவனின் உருவம் அவளை மீண்டும் இம்சிக்கத் தொடங்கியது...அவனை அவள் ஐந்து வருடங்களிற்கு முன்னதாக கல்லூரியில் பார்த்ததுதான் அதன் பின் அவனை அவள் எங்குமே கண்டதில்லை...கண்டதில்லை என்பதைவிடவும் அவள் அவனின் முகத்தைக் கூட காண விரும்பவில்லையென்பதே உண்மை...

கல்லூரி நாட்களென்பது நம் வாழ்க்கை மொத்ததிற்குமான அழகான நினைவுகளைப் பரிசளித்துச் செல்பவை...சிலருக்குப் புன்னகையையும் சிலருக்கு கண்ணீரையையும் தருபவை அவளுக்கு இரண்டையும் அளவுக்கதிகமாகவே அவளின் அந்த ஒருவருடக் கல்லூரி நாட்கள் வழங்கியிருந்தன...

அங்குதான் அவள் அவனை முதன் முறையாகச் சந்தித்துக் கொண்டதும்,அங்கேதான் அவள் அவனை இறுதியாகச் சந்தித்ததும்...அவளை அதிகமாய் சிரிக்க வைத்தவன்,இறுதியில் அளவுக்கதிகமாய் அழ வைத்துவிட்டும் சென்றிருந்தான்...அன்று தொலைத்த புன்னகையை இன்றுவரையிலும் தேடிக் கொண்டுதான் இருக்கிறாள்...இருந்தும் அது அவளிற்கு அகப்படாமல் விலகியேதான் இருக்கின்றது...

மீண்டும் அந்தப் புன்னகையான தருணங்களை மட்டுமாய் மீட்டிப் பார்த்திட அவளின் மனம் ஐந்து வருடங்கள் பின்னோக்கி நகர்ந்தது....

தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (10-May-18, 12:11 pm)
பார்வை : 610

மேலே