உறவுகள்
ஆரவாரமற்ற இரவுச்சாலைகளைப் பார்க்கையில் நினைவுக்கு வருகின்றன தனிமையில் நாட்களைக் கடத்தும் முதிய முகங்கள் . இளமைப் பகலை அனுபவிக்கும் ஒவ்வொருவரும் முதுமை இரவுகளைக் கடக்கத்தான் வேண்டும். பணத்திற்கான விதைகளோடு சேர்த்து அன்பிற்கான விதைகளையும் விதையுங்கள். பணம் வசதிகளை மட்டுமே தரும். அன்பின் கனிகளை அல்ல. சண்டை போட மட்டும் அல்ல சந்தோஷங்களைப் பகிரவும் இருவர் வேண்டும். கூட்டுக் குடும்பங்கள் கேப்ஸுல் குடும்பங்களாக குறைந்ததற்கான தண்டனையை அனுபவிப்பது என்னவோ தடியூன்றுகிறவர்களும் தவழ்கின்றவர்களும் தான். இரு சாராருக்கும் கவனம் செலுத்த முடியாததால் அதிகரிக்கின்றன முதியோர் இல்லங்களும் மழலையர் கூடங்களும். முதியோரைப் பேணுவதைப் பார்க்கும் குழந்தைகள் மட்டுமே தம் பெற்றோரை முதுமையில் பேணுவது கடமை என உணர்கின்றனர். முதியோர் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கவும், குழதைகள் வாழப்போகும் வாழ்க்கைக்கு வழிகாட்டவும் முதியோரைப் பேணுங்கள் அவரவர் இல்லங்களில். இளமையில் பேணப்படும் உறவுகளே முதுமையில் உடனிருக்கின்றன. பரபரப்பான இளமைப்பொழுதைக் கழிப்பதற்கு மட்டுமானால் பணம் போதுமானதாக இருக்கலாம், ஆனால் முதுமையைக் கடக்கப் பணம் மட்டுமல்ல மனிதர்களும் தேவை என்பதை மறவாதீர்கள். மனிதர்களையும் சம்பாதியுங்கள், மறவாது சேமியுங்கள். உறவுகளை நேசிக்கவும் பாதுகாக்கவும் கற்றுக்கொள்வோம்!!