447 வேண்டுவார்க்கு வேண்டுவது அருள்வோன் மெய்ப்பொருள் – துன்பம் 13

எழுசீர் விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)

நில்லாத செல்வம் அறவோர்வெ றுக்கும்
..நிலையாலும் வான்கதி யையவ்
வல்லார்வி ரும்பும் வகையாலும் அற்ப
..மகிவாழ்வு அவர்க்கிறை தரான்
வில்லாரு முத்தி விழையாத வர்க்கு
..விழலன்ன வாழ்வைய ருள்வான்
ஒல்லார்வி ரும்பு பொருள்தந்து வெல்லும்
..ஒருநீதி வேந்தன னையான். 13

- துன்பம்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”அறத்தின்படி வாழும் சான்றோர் நிலையில்லாத செல்வத்தைக் கண்டு அதனை வெறுப்பதாலும், நிலையான உயர்ந்த வீடு பேற்றை அச்சான்றோர் விரும்புவதாலும் ஆண்டவன் அற்பமான புற்பனி போல் அழியும் உலகியற் சிறு வாழ்வை அவர்க்கு அருளான்.

அழியா ஒளிமிக்க வீடு பேற்றை விரும்பாதவர்க்குப் பயனில்லாத அவர் விரும்பிய உலக வாழ்வை அருள்கின்றான்.

இது, பொருள் அவாக் கொண்ட பகை மன்னர்க்கு அவர் விரும்பியவாறு பொருள் கொடுத்து அப்பகைமையை வெல்லும் ஒரு நீதி வேந்தரின் முறைமையைப் போன்றதாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

மகி - உலகம். விழல் - பயனில்லாதது.
ஒல்லார் - பகைவர். நீதி - முறைமை.

விளக்கம்:

இரண்டாம் அடியில்,

’அவர்க்கிறை தரான்’
நிரை நிரை நேர் நேர்
கருவிளம், தேமாவாகவும் பிரித்திருக்கிறேன்.

தேவாரத்தில் அப்பர் சுவாமிகள் பாடிய திருத்தாண்டகப் பாக்களில் பெரும்பாலானவை எண்சீர் விருத்தங்களாகவே இருக்கும்.

உதாரணத்திற்கு,
’சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து’ என்ற பாடலில் மூன்றாம் அடியில்,

’அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோ யராய்’ என்பதில் உள்ள யராய் என்ற சொல்லிற்கு எழுத்துக் கணக்கைக் கொண்ட தாண்டகப் பாட்டின் இலக்கணப்படி இந்த அடி சரி என்கிறார். தேமா என்று எடுத்துக் கொள்ளலாம் எனப்படுகிறது.

(கி.வா.ஜ அவர்களின் கவி பாடலாம் வாங்க 10 எண்சீர் விருத்தம்)

இது போலவே, மாயூரம் வேதநாயகம் பிள்ளையும் அவரது மேற்கண்ட பாடலில் அவர்க்கிறை ‘தரான்’ என்ற சீரையும் அமைத்திருக்கலாம்.

காய்ச்சீர் வருமிடங்களில் விளச்சீர் வரலாமென்றும், விளச்சீர் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாமெனவும் தெரிகிறது.

எனவே மேலேயுள்ள மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் நீதிநூலில் உள்ள துன்பம் என்ற அதிகாரத்தின் 13 ஆம் பாடல் எழுசீர் விருத்தத்தில் 1, 3, 5 ஆகிய சீர்கள் விளச்சீர் வருமிடங்களில் காய்ச்சீர்கள் அமைந்தும் இருப்பதைக் காணலாம்.

மேற்கண்ட எழுசீர் விருத்தப் பாடல்,
’தேமாங்காய், தேமா புளிமாங்காய் தேமா புளிமாங்காய் விளம் தேமா’ என்ற அமைப்பில் இருக்கிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Jun-18, 6:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 122

மேலே