மலக்குழிப்பிணங்கள்
விசிலூதி, வண்டி இழுத்து பொதிமாடு என்றானேன்..
அதிசயம்!! இங்கே பெண்மாடும் பொதி மாடே..
நல்ல பேர் ஒன்று கிடைத்தது...
குப்பைவண்டி என்று..
என் பேர் மறந்தேன்....
இரைத்த கழிவு நீக்கி சுத்தம் செய்தேன்
காகம் போலே...
வீட்டுவாசலில் வந்து விளிக்கும்போது
பழையதை வாரி வழங்கி
'வாழும் வள்ளல்' பட்டம் பெற்றுக்கொண்டான்...
உயிரை அர்பணித்தேன் பிறக்கும்போதே
மலக்குழிக்கு...
ராணுவ வீரன் போல்
தற்காப்பாய் எப்போதும் இடுப்பில் ஒரு மதுபாட்டில்...
மலிவு விலைக்கு உயிரென்று
என் கழுத்தில் போர்டு மட்டுமில்லை
என்றோர் உணர்வு..
அவன் மலம் அள்ள
இச்சாதியை வைத்திருக்கிறான்...
இல்லையெனில் எப்போதோ இனப்படுகொலை பிறந்திருக்கும்..
இதற்கு நோபல் பரிசு இல்லையென்று சலித்தும்கொண்டான்...
இப்போதும் படுகொலைகள் மலக்குழிகளின் வழியாக!!
இச்சாதியில் ஏன் பிறந்தேனென எண்ணும்படி வைத்துவிட்டான்..
நாளைய மலக்குழிப்பிணமாக நான் ஒன்று கேட்கிறேன்
என் இனவிடுதலை எப்போது?
இடஒதுக்கீடு இல்லையென்றால்
இவ்விடுதலை சாத்தியமன்று..
இடஒதுக்கீடு ஒரு மருந்து;அஃது ஓர் அறம்
அது என் உரிமை; ஆனால் அது தீர்வன்று..
எனக்கு இழிச்சாதியெனும் அழுக்குப்பூசி
நீயும் நானும் ஒன்று; தமிழனாய் ஒன்றிணைவோம்;
சாதிகள் இல்லையென்று பாடிவரும்
ஊழல் எதிரிப்புவாதிகளே!!
உங்கள் வார்த்தைகளெல்லாம் உதட்டளவில் மட்டும்..
அதன் கணக்கு இடஒதுக்கீடுக்கு ஆப்பு..
சூனியக்காரனே!! சூத்திரன் என்று சொல்லி
ஒடுக்கிவைத்தாய் என்னை
உன்னைப்போல்தான் நானும்..
என் வலிகள் மட்டும் ஏன் உணரவில்லை நீ?
நானும் உன்னினம் என்னும் நினைவு வரும்வரை...
என் விடுதலை இராது..
மேலும் ஒரு வழி !!
ஒன்று என்னை கோயில் கருவறைக்கு நுழையவிடு..
இல்லை கக்கூஸ் கழுவ என்னோடு வந்துவிடு..
காத்திருக்கிறேன் கையில் துடைப்பதுடன்...