மறதிக்கு மருந்து

அரியணை ஏறிவிட்டு
அரளியை அரைத்துவிட்டு
அங்கியிலும் அங்கத்திலும்
அனைவருக்கும் பூசிவிட்டு...

ஆற்றாத நெஞ்சமாய்
ஆர்ப்பரித்து கொஞ்சமாய்
ஆகாது..தாங்காது...
ஆண்டவனே...என்று நீலியாகி...

இருப்பதை இல்லையாக்கி..
இத்தரையை கரையாக்கி..
இச்சையை பூர்த்தியாக்கி.. இஷ்டத்தை செய்துகொண்டு..

ஈக்களாக்கி மக்களை
ஈட்டியாலே குத்திவிட்டு..
ஈறாக்கி கூறாக்கி..
ஈரமில்லா நெஞ்சத்தோடு..

உடல் வளர்த்தேன்..
உயிர் வளர்த்தேன்... என்றே நீ
உலகம் சுற்றி வந்தாலும்...
உணர்ந்து கொள் உண்மையை நீ...

இப்படியும் ஒரு நாள் வரும்..

ஊரிழந்து உடையிழந்து..
ஊணிழந்து உயிரிழந்து..
உன்னோடு சேர்ந்ததெல்லாம்
மண்ணோடு மக்கிப்போகும்..
ஒய்யாரப் பூஞ்சோலை
ஒட்டுமொத்தப் பறிபோகும்...
ஓயாத ஒப்பாரி
ஒருக்காலும் உதவாது.....
மாயாதே மனிதா...
உணர்ந்துகொள் உண்மையை நீ..!

எழுதியவர் : உமர்ஷெரிப் (20-Jun-18, 11:55 am)
சேர்த்தது : செரிப்
பார்வை : 58

மேலே