பஞ்சுமிட்டாய்
நீல வண்ண பாவாடை
வெள்ளை நிறச் சட்டை
இரட்டை சடை பின்னல்
தோளில் புத்தகப் பை
பள்ளிக்குச் சென்றாள்
பத்து வயது பட்டு..
பள்ளியும் தொடங்கியது..
பாடங்களும் நடந்தது..
இரு மணியோசை ஒலித்ததும்
இடைவேளையும் வந்தது..
இன்பம் தலைதூக்க..
நினைவில் மிட்டாய் கடை..
விரைந்தோடி நின்றாள்
மிட்டாய் கடையில்..
புதுவரவாய் பஞ்சுமிட்டாய்
பட்டுவின் பார்வையில்..
இது வேண்டும் என்றாள்
ஒரு ரூபாய் நீட்டியபடி..
பஞ்சுமிட்டாயோ ஐந்து ரூபாய்
ஏக்கத்தோடு திரும்பினாள்
எதையோ வாங்கி..
அவள் நினைவு முழுவதும்
பஞ்சுமிட்டாய்
பதியவில்லை பாடம்..
அவள் கனவு முழுவதும்
பஞ்சுமிட்டாய்
தூக்கமில்லை இரவில்..
மறுநாள் அம்மாவிடம்
ஐந்து ரூபாய் கேட்க..
அம்மாவோ
என் தினக்கூலியில்
தினமும் உனக்கு
ஒரு ரூபாய் மட்டுமே என்றாள்..
மறுவார்த்தை பேசாது போனாள்...
ஒரு ரூபாயை வாங்கியபடி..
விரல் விட்டு எண்ணினாள்
இன்னும் நான்கு நாட்கள்..
ஐந்து ரூபாயும் சேர்ந்தது
ஐந்தாம் நாளில்..
துள்ளிக் குதித்து ஓடினாள்..
நினைவு முழுக்க பஞ்சுமிட்டாய்
இடுப்பில் அழும் குழந்தையோடு
அழுக்குப் பெண்ணொருத்தி
கையேந்தி நின்றாள்
நடுத்தெருவில்
யாரும் செவிகொடுக்காத
குழந்தையின் அழுகை
பட்டுவை ஏதோ செய்ய..
"அக்கா தம்பிக்கு
பிஸ்கட் வாங்கி கொடுங்க"
என்று ஐந்து ரூபாயை
சட்டென கொடுத்தாள்
பட்டுக்குட்டி
அவள் நிம்மதியுடன்
நடை தொடர்ந்தாள்
பள்ளிக்கு..
நினைவில் பஞ்சுமிட்டாய்..
மீண்டும் சேமிக்கத்
தொடங்கினாள்
ஐந்து ரூபாய்