தந்தையிடம் ஒரு கேள்வி

சாதிகள் இல்லையடி பாப்பா- என்று
கற்று தந்தவரும் நீங்கள் தான்...
அவன் என்ன சாதி
நம்ம என்ன சாதி
என்று வசைமொழி பாடியவரும்
நீங்கள் தான்....
என்னைத் தேடி என் நண்பர்கள் வரும்போது அவர்களை,
"உள்ளே கூப்பிடும்மா.." என்று
அன்பு வார்த்தைகளைப்
பகிர்ந்தவரும் நீங்கள் தான்...
என் வீட்டிற்கு வருவதற்கு
அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது?
என்று கடுஞ்சொல் கூறியவரும்
நீங்கள் தான்....
அடுத்த வீட்டு ஆண்பிள்ளை
காதலெனும் கருவியைக் கையில் ஏந்தி
சாதியை சிதைக்கும் போது
அவனோடு கைகோர்த்து நின்ற உங்களுக்குத்....
தன் வீட்டுப் பெண் பிள்ளையின்
காதல் மட்டும் கசந்து விட்டதா???
சாதி சாதியென்று
பித்து பிடித்து அலைந்த தந்தையே...
உங்களிடம் ஒன்றே
ஒன்றுதான் கேட்கிறேன்.....
தன் சாதி தான் பெரிது என்று
தன் சாதிக்குள் திருமணம்
செய்து வைத்த உங்களுக்கு
அவன் ஒரு வருடத்தில்
இறந்து போனதும்,
அந்த நெருப்போடு சேர்ந்து
சாதியும் எரிந்து போய்விட்டதோ??
எப்படி கேட்க முடிகிறது??
எங்கள் காலத்திற்குப் பிறகு
உனக்கு ஒரு துணை வேண்டும்.
அவன் கீழ் சாதியாக இருந்தாலும்
உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வான்...
"அவனைத் திருமணம் செய்து கொள்" என்று..

எழுதியவர் : தமிழி (7-Jul-18, 8:14 pm)
சேர்த்தது : தமிழி
பார்வை : 186

மேலே