காதலர்கள் கவனத்திற்கு கவிதைத் தொகுப்பு

காணொளி வடிவம் காண https://youtu.be/32JzWxuJGVI
1 காதல்
ஓர் அட்சய பாத்திரம்
இதில் கவிதைகள் குறைவதேயில்லை…

2. எனக்காகத்தானே உன்னில் படைக்கப்பட்டிருக்கிறது
ஏன் மறைக்கிறாய்
உன் உதட்டுச் சுழிப்பில் புன்னகையை

3. சூரியன் விழிக்காத
ஓர் மார்கழிக் காலையில்
நீ கோலமிட்டுக் கொண்டிருந்ததையும்
கவனிக்க நேரமின்றி
ஏதோ ஒரு நேர்முகத்தேர்விற்காக
அவசரத்தில் பறந்தபோது
அறியாது கோலத்தை மிதித்துவிட்டு
அசடு வழிந்து நின்றேன்
அன்றிலிருந்துதான் நீ என்னை
தண்டித்துக் கொண்டிருக்கிறாய்
அன்றிலிருந்து கோபப் பார்வையிலும்
இன்றுமட்டும் ஏனோ
என்னைப் பார்க்க மறுத்தும்

4. நீ கடல் அலைகளில்
கால் நனைக்கையில் எல்லாம்
ஓங்கியடிக்கிறது
ஓர் காதல் அலை எனக்குள்

5. உனக்கு யாரென்று தெரியாத
என் நண்பர்கள் எல்லோரும்
உன்னைப் பற்றி தெரிந்து வைத்திருப்பதில்
கோபமாக வருகிறது
என்றாலும்
இவரகள் எல்லோரையும் போலவே
என்னையும் உனக்குத் தெரியாது

6. உன்னிடம் மறைக்க நினைத்த
உண்மைகளைக் கொஞ்சம்
உளறிவிடுகிறேன் நம் உரையாடலின்போது
நீயும் கொஞ்சம் கோபித்துவிட்டு
பின் குழந்தையாகிவிடுகிறாய்
இனி உளறுவதற்காகவென
சில உண்மைகளை
மறைக்க வேண்டுமெனத் தோன்றுகிறது

7. என் சுவாசங்களை அதிகப்படுத்திவிடுகிறாய்
நீ நீரினுள் மூழ்கி
மூச்சடக்கி விளையாடும்போது

8. உன்னைப் பார்ப்பதற்காய்
இந்தப் பேருந்தில் ஏறவில்லை
என்றாலும் ஏறியவுடன்
நீ தான் கண்ணில்படுகிறாய்

9. ஏன் இன்று பேச மறுக்கிறாய்
ஏதாவது எல்லை மீறிவிட்டேனா
நேற்றைய கனவில்

10. நான் பார்க்காததுபோல
நடித்துக் கொண்டே
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
நீபார்த்தும் பாராததுபோல
நடித்துக் கொண்டிருக்கிறாய்
உன் பார்வை மண்ணிலும்
என் பார்வை உன்னிலும்

11. நட்பின் கடைசி படிக்கட்டிற்கும்
காதலின் முதல் படிக்கட்டிற்குமிடையே
எவ்வளவுதூரம் எனகேட்கிறாய்
உனக்கும் எனக்குமான
இடைவெளி தூரம்தான் என்கிறேன்
நீ மௌனமாகிறாய்

12. ‘உனக்கு மறக்க முடியாத நாள் எது?’
‘அப்படி ஒன்றுமில்லையே!’
‘நிச்சயமாய் இருக்கிறது’
‘எனக்குத் தெரியாதா என்னைப் பற்றி? !’

கொஞ்சம் மௌனித்து பின்
வெட்கப்பட்டுச் சிரிக்கிறாய்…

13. கடவுள் எனக்கு
வரம் தருவதாக இருந்தால்
இரண்டு வரங்கள் கேட்பேன்
காதலிக்கும் யாரும்
தோல்வியடையக் கூடாது
உலகில் எல்லோரும்
காதலிக்கவேண்டும்

14. அங்கு ஏதோ ஒரு
அரசனின் புகழை நிலைநாட்ட
அரண்மனை கட்டும் பணி
நடக்கிறது போலும்…

எங்கு நோக்கினும்
வடித்து முடிக்கப்பட்ட அழகிய சிற்பங்களும்
சிற்பிகள் செதுக்கிக் கொண்டிருக்கும்
அரைகுறை சிற்பங்களும்
இன்னும் செதுக்கத் துவங்காத
சிலைகளுக்கான பெரிய பாறைகளும்

எண்ண முடியாத அளவில்
எத்தனையோ யானைகளும்
கட்டுமானப் பணியிலிருக்கும்
கணகற்ற அடிமைகளும்
மேற்பார்வையில் இருக்கும்
அரசாங்க மந்திரிகளும்

இன்னும் நினைவிலில்லாத
எத்தனையோ காட்சிகள்…
சற்று தொலைவில்
இயற்கையும் பிரமிக்கும் அழகில்
பேரழகி சிலை ஒன்று

என்ன இது…? !!
துண்டிக்கப்பட்ட கைகட்டை விரல் ஒன்றும்
சற்று நேரத்திற்கு முன்னால் சிந்தி
இன்னும் உறையாத குருதியும் மண்ணில்
எந்த சிற்பியுடையதென்று தெரியவில்லை


இன்னும் சற்றுதொலைவில்
உதிர்ந்த சில முடிகளும்
உடைந்த சிலவளையல் துண்டுகளும்
அறுந்து சிதறிய சில
பாசி மணிகளும் பரவிக்கிடந்தன
அடையாளம் கண்டுவிட்டேன்
நிச்சயமாய் இது உன்னுடையதுதான்…

மனம் வெடித்து உயிர் பதைத்து
ஓடுகிறேன்…ஓடுகிறேன்…
நண்பன் உதைத்து
உறக்கம் கெடுத்துவிட்டான்
கனவும் கலைந்துவிட்டது.

15. விமானத்தின் இரைச்சல் கேட்டு
நீ அண்ணாந்து பார்க்கையில்தான்
தற்செயலாகப் பார்த்தேன்
உன் கழுத்துப் பாசிமாலையின்
நுனியில் தொங்கும்
மூன்று முத்துக்களில்
ஒன்றைக் காணவில்லை

16. பேருந்துப் படிக்கட்டில்
கால் இடறியபோது
நீ கண்களில் காட்டிய
பதற்றத்தைப் பார்த்துவிட்டு
விழுந்திருக்கலாம் என்றே
தோன்றுகிறது எனக்கு

17. சாரல் பெய்யத் துவங்கிய
ஓர் மாலை வேளையில்தான்
முதல் முதலாக
உன் உடையும் என் உடையும்
உரசிக் கொள்ளும் நெருக்கத்தில்
உன் குடைக்குள்
என்னைஅனுமதித்தாய்
சாரல் வலுப்பெற்றபோது
மண்வாசனை சுகமாக இருக்கிறது என்றாய்
உன் வாசனையும்தான் என்றேன்
கொஞ்சம் கோபித்து
பின் அதிகமாகவே வெட்கப்பட்டாய்

18. உனக்கப் பிடித்தவர்கள் யாருக்காவது
என்னைப் பிடிக்காமல் போனால்
உனக்குப் பிடிக்காமல் போகிறது
அவர்களைஎன்கிறாய்

எனக்குப் பிடிக்காதவர்கள் யாருக்காவது
உன்னைப் பிடித்துப்போய்விட்டால்
எனக்குப் பிடித்துப்போகிறது
அவர்களைஎன்கிறேன்
எப்படியோ இருவரும்
காதலைச் சொல்லிவிட்டோம்

19. அடிக்கடி என் யூகங்களைப்
பொய்யாக்கிவிடுகிறாய்
உன்னைச் சிரிக்கவைக்க முயன்றால்
வெட்கப்பட்டுவிடுகிறாய்
வெட்கப்படவைக்க முயன்றால்
சிரித்து விடுகிறாய்

20. என் வீட்டு நூலகத்தில்
நீ படித்ததற்காக மட்டுமே
பாதுகாக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் சில
கேலி செய்கின்றன என்னை
உன் தோழியர்களைப் போலவே

நீநிச்சயமாய் படிக்கவேண்டுமென
பாதுகாக்கப்படும் புத்தகங்கள்
பொறாமை கொள்கின்றன
என் நண்பர்களைப் போல

நீ மட்டுமே படிப்பதற்காய்
தனித்து வைக்கப்பட்டிருக்கும்
புத்தகங்கள் வெட்கப்படுகின்றன
உன்னைப்போல…

21. உன் கையால் கிழிக்கப்படும்
பேறுமட்டுமே பெற்ற
என் காதல் கடிதங்களில்
இது எத்தனையாவது !?
இதையாவது சொல்
நிச்சயமாய் நீ
எண்ணிக்கை வைத்திருப்பாய்

22. எழுத வேண்டிய வீட்டுப் பாடங்கள்
எதுவும் மறக்கவில்லை என்றாலும்
இன்றும் உன்னிடம் வந்துகேட்பேன்
ஒவ்வொரு மறதிக்கும் செல்லமாய்
ஒவ்வொரு குட்டு வைப்பாய்தானே

23. வெயில் கொடுமைதாங்காமல்
இடையில் இளைப்பாறுகிறதோ?!
உன் கைக்குட்டை

24. என் பெயரை
யாரும் அழைத்தால் நீயும்
உன் பெயரை
யாரும் அழைத்தால் நானும்
திரும்பிப் பார்க்கக் கட்டளையிட்டிருக்கிறது
காதல்...

25. எத்தனை புண்ணியம் செய்தனவோ
இந்தப் பூக்கள்
நீ சரமாய்த் தொடுக்கையில்
உன் மடியில் புரள்கின்றனவே…

26. வெட்கப்பட அறிந்திராத வயதில்
நீ பட்டாம் பூச்சியில் ரசிந்திருந்த
நம் விளையாட்டுப் பொழுதில்
கன்னத்தில் முத்தமிட்டேன்.
அழுதவாறே வீட்டிற்கு ஓடினாய்
மறுநாள் காலையில்தான்
தோப்புக்கரணத் தண்டனை கொடுத்துவிட்டு
எனக்குக் கோலம் போடக் கற்றுக்கொடுத்தாய்
இன்றும் கோலங்கள் பார்க்கையில்
கண்களில் கண்ணீர்;…

27. காதலிக்கக் கூடாதென
உன் தோழி ஒருத்திக்கு
அறிவுறுத்திக் கொண்டிருந்த
ஓர் பேருந்துப் பயணத்தில்தான்
உன்னை முதலாகச் சந்தித்தேன்
அறிவுரையும் பயணமும்
நீண்டுகொண்டே இருந்தது
காதலிக்கக் கூடாதென்று
நான் கொண்டிருந்த உறுதி
எனக்குள் கரைந்துகொண்டே இருந்தது

நான் கேட்க நினைக்கையில்
உன் விபரங்கள் கூறி
எனக்கு காதல் தேவனானான்
உன் வகுப்பறைத் தோழன் ஒருவன்
உன் தோழியின் காதலனாய்
இருப்பானோ என்னவோ?

28. தினமும் நம்மிடையே நிகழும்
உணவுப் பண்டமாற்றமும்
அடிக்கடி நிகழும்
கவிதைப் பரிமாறல்களும்
காதல் என்று நம் வகுப்பறையில்
விமர்சனத்திற்குட்பட்டபோது
நான் மகிழ்ச்சியானேன்
நீ மௌனமானாய்
பதிலாய் உன்னிடம்
புன்னகையைப் பரிசாகக் கேட்டேன்
நீயோ வெட்கத்தையும் சேர்த்தே கொடுத்தாய்

29. காதல் எனக்கிடும்
எல்லா ஆணைகளின் இறுதியிலும்
அவள் பெயரே மிளிர்கின்றன
கையொப்பமாய்

30. நிலவைக் காட்டி சோறூட்டுகிறாய்
பக்கத்து வீட்டு குழந்தைக்கு
பசிக்கிறது எனக்கு(ம்)

31. நீ செல்லக் கோபம் கொண்டிருந்த
ஓர் காலையில்
‘உன் கோபம் பிடித்திருக்கிறது’ என்றேன்
‘உன் தூபம் பிடிக்கவில்லை’ என்றாய்
‘உன் கொலுசொலி பிடிக்கும்
கொஞ்சம் நட’ என்றேன்
கழட்டி கையில் பொத்திக்கொண்டு
பழிப்பு காட்டி சிரித்தாய்
‘இந்தச் சிரிப்பும் பிடித்திருக்கிறது’
உடனே மௌனமானாய்
‘உன் துப்பட்டாவும் பிடித்திருக்கிறது’
அப்போது உண்மையாகவே
நீ கோபம் கொண்டாய்
அட அதுவும் கூட அழகுதான்

32. என் முதல் கவிதைத் தொகுப்பை
உன்னிடம் கொடுத்த மறுநாளில்
உன் விமர்சனம் கேட்டேன்
காரை பெயர்ந்த
உன் வீட்டுச் சுவரையும் கூட
கவிதையாக்கியிருந்ததற்காய்
பிரமிப்பு காட்டினாய்
நாம் பரிமாறிக் கொள்ளாத காதல்
ததும்பி நின்றது இருவர் கண்களிலும்
‘இன்றும் காதலிக்கிறாயா?!’
உச்சரிப்பை முடிக்கும் முன்
உகுத்தது கண்கள் காதலை

33. உன் பாராமுக விருந்தோம்பலின்
பொருள் புரியாமல் கடும் பசியிருந்தும்
வேலை நிறுத்தம் செய்ய முற்படுகின்றன புலன்கள்
பரிமாறியது நீ என்பதற்காக மட்டுமே
உண்ணச் சொல்லிக் கட்டளையிடுகிறது
காதல்

34. உன்னை வசிகரிப்பதற்காய்
நான் எடுத்துக் கொண்ட
எல்லா மெனக்கெடல்களையும் விட
அரியதும் பெரியதும்தான்
உன் உள்ளூரப் புன்னகையும்
உதட்டுச் சுழிப்புகளும்

35. “நம் நட்பைக் காதலென
சந்தேகிக்கிறாள் என் தோழி” என்கிறாய்
நான் சமாளித்து புன்னகைக்கிறேன்
கைகொட்டி சிரிக்கிறது காதல்


36. காதல் கிறக்கத்தின் போது
உன் அழகைத் திருடமுடிகிறதைவிட
கலைந்த உறக்கத்தின்போது
அன்பால் உன்னைவருட முடிகிற சுகமே
அவசரம், அவசியம்…
திருமணத்திற்கான நாட்களை
எண்ணிக் கொண்டிருக்கிறேன்

37. என் காதலை நட்பெனப்
புரிந்து கொண்டாய்
உன் நட்பைக் காதலெனப்
புரிந்து கொண்டேன்
நான் தவறாய் புரிந்துகொண்டதாய்
சண்டையிடுகிறாய்
தவறு உன்னிலும்தானே
நீயும்தானே தவறாகப் புரிந்துகொண்டாய்

38. என்ன விந்தை இது
மஞ்சள் வானில் கருப்புநிலா
உன் உள்ளங்கையில் மச்சம்

39. உன் கைக்குட்டைஉறிஞ்சாமல் விட்ட
ஒரு துளி வியர்வையையும் கூட
கவனித்துவிடுகிறது என் கண்கள்

40. எந்தப் பூவிலும்
இந்த மென்மையில்லை
இன்னொரு முறைதொடு

41. இன்று எப்படியாவது
கண்டுபிடித்துவிட வேண்டும்
நம் சந்திப்புகளின்போது
முதலில் முறுவலிப்பது
நீயா? நானா?

வெகு நேரமாய்க் காத்திருந்தேன்
வழக்கமான அந்த ஒருநொடி நிகழ்வு
நடந்தேறிய பின் உணர்ந்தேன்
உன்னைப் பார்த்ததும் என் உதடுகளும்
என்னைப் பார்த்ததும் உன் உதடுகளும்
அனிச்சைப் புன்னகை உதிர்க்கப் பழகியிருப்பதை

42. தாவணிக்கு நன்றி
என்றும் உன் சுடிதார்
மறைக்கும் மச்சத்தை
இன்று எனக்கு
காட்டிக் கொடுத்ததால்

43. இயற்கையின்
அழகானதப்புக் கணக்கு
உன் ஆறாவதுவிரல்

44. “ஞாபகக் கொலைகள் செய்வதெப்படி?”
கொஞ்சம் கற்றுக்கொடு
நானும் நிம்மதியாயிருக்க

45. அவள் புன்னகையைப்
பதிவு செய்தேன் புகைப்படத்தில்
ரசிக்க மறந்து....
இனிப்பைப் படம் பிடித்து என்ன பயன்?!!


46. சாளரம் வழியே வேடிக்கை பார்க்கிறேன்
கும்மாளமாய் நீயும் மழையும்
நனைந்த மகிழ்ச்சியில் நீ
நனைத்த மகிழ்ச்சியில் மழை


47. உன் விரல்கள் தவழ்ந்த
கவிதைத் தொகுப்பை
எதார்த்தமாகத்தான் புரட்டினேன்
ஏதேதோ எழுதச் சொல்கின்றன
மஞ்சள் குளித்த வார்த்தைகள்

48. காதல் தோல்வியில் அமிலக் குடுவை
காதல் மரணத்தில் அமிலத் தொட்டி
நினைவுகள்

49. எந்தக் கவிதையிலும்
எழுதிவிட முடியாது
புளிப்பில் கூசும்
அவள் முகத்தின் அழகை

எழுதியவர் : செவல்குளம் செல்வராசு (8-Jul-18, 9:53 pm)
பார்வை : 356

மேலே