நெருப்பு நொடிகள்-1

ட்ரிங் ட்ரிங்.. அலைபேசி அழகாய் சிணுங்கியது. ஓசை கேட்டு மாடிப்படிகளில் துள்ளியோடி வந்தாள் டீனா. நவநாகரிக மங்கையவள் அணிந்திருந்த பாவாடை கணுக்காலை உரசி சிறகடித்தது. தோள்களில் புரண்ட கருங்கூந்தலை விலக்கிக்கொண்டே அலைபேசியை கையில் எடுத்து ஒரு முனையை கழுத்தில் புதைத்தாள்.

ஹலோ..

டீனா?

டீனா தான் பேசுறேன். நீங்க?

டீனா!! எதிர் முனையில் கேள்விக்குறி மகிழ்ச்சி கடலாய் மாறி கொண்டிருந்தது.

சட்டென சுதாரித்து குரல் வந்த திசையில் மனதை செலுத்திய டீனா விக்கித்து போனாள்.

ப்ரியா!

ஒரே வண்ண உடையணிந்து, ஒன்றாய் உணவருந்தி, ஒரே வகுப்பில் பயின்ற உற்றத்தோழிகள் இவர்கள் இருவரும். கல்லூரி காலங்கள் நினைவுகளாய் மாற தொடங்கியிருந்த நாட்களில் சற்றும் எதிர்பார்த்திராத இன்ப அதிர்ச்சியாய் இருந்தது அந்த திடீர் அழைப்பு. சில நலம் விசாரிப்புகளும், உணர்வுகள் மேலோங்கிய சில மௌன நிமிடங்களும் கடந்த பின், தான் அழைத்த விஷயம் குறித்து பேச தொடங்கினாள் ப்ரியா.

காலேஜில் இருந்து அனுப்பிய ஈமெயில் பாத்தியா டீனா?

இல்லையே. என்ன விஷயம்!

இவர்கள் படிப்பு முடிந்து வெளியேறி ஒரு வருடம் ஆகியிருந்த நிலையில், அந்தக் கல்லூரி நிர்வாகம் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. கேட்டதும் உற்சாகம் கொள்ள வேண்டிய செய்தி தான். ஆனால் ஏனோ அலைபேசியில் ஒரு கணம் நிசப்தம் நிலவியது.

நீ என்ன நினைக்குறனு புரியுது டீனா? எனக்கும் அதே தயக்கம் தான்.

ம்ம்ம்.. திரும்பவும் அதே நினைவுகளை சந்திக்க உனக்கு துணிவிருக்கா ப்ரியா?

இல்லை டீனா. மார்டினுக்கு நடந்த கொடுமையை மறக்க எனக்கு இந்த ஒரு வருஷ காலமும் கூட பத்தலை.

அப்போ எப்படி..?? வார்த்தைகளை மென்று விழுங்கினாள் டீனா.

"காரணம் இருக்கு..", டீனா சொல்ல தயங்கியதை கணித்தவாறே ப்ரியா பேச தொடங்கினாள்.

கல்லூரி அனுப்பிய மெயில் கிடைத்ததும் தன் நட்பு வட்டங்களை தொடர்பு கொள்ள துவங்கியிருந்தாள் ப்ரியா. ஒவ்வொரு தோழியாய், ஒவ்வொரு நண்பனாய், நினைவுகளையும், சிரிப்புகளையும், அழுகைகளையும் கூட சிந்தாமல் சேர்த்துக்கொண்டே வந்தாள். அப்படி ஒருநாள் மென்மலரை தொடர்புகொள்ள நேர்ந்தது. டீனா அளவுக்கு நெருக்கம் இல்லையென்றாலும் மென்மலரும் ப்ரியாவுக்கு நல்ல தோழி. அவளிடம் பேசிய வார்த்தைகள் சிறிதும் மறவாமல் ஞாபகம் இருந்தது ப்ரியாவுக்கு. அதை அப்படியே டீனாவிடம் ஒப்பித்தாள்.

நம்ம கூட படிச்ச மோனாவை ஞாபகம் இருக்கா டீனா?

எப்படி மறக்க? அவளை பற்றி மார்டின் பேசாத நாளில்லையே.

அவ இப்போ ஊரில் இல்லை. குடும்பத்தோடு சென்னைக்கு சென்றுவிட்டார்களாம்.

அப்படியா? வேலை கிடைத்து விட்டதோ என்னவோ!

இல்லை டீனா. மலர் அப்படி சொல்லலை.

அப்போ?? ப்ரியாவின் குரல் மாறுவதை உணர்ந்துகொண்ட டீனா கையில் இருந்த ரிஸீவரை இறுகப்பற்றினாள்.

அவளுக்கு ஏதோ மனநோய் இருக்கிறதா ஊரில் பேசிக்கிட்டாங்க போல. அக்கம்பக்கத்தினரின் பேச்சு பொறுக்காமல் வீட்டை பணியாளர் கிட்ட கொடுத்துட்டு சென்னை போயிட்டாங்க.

ஐயோ! என்ன ஆச்சு அவளுக்கு?

எனக்கும் புரியலை டீனா. ஆனால் காலேஜ் முடிஞ்சு வீட்டுக்கு போனதிலிருந்து அவ அப்படித்தான் இருந்திருக்கா. வகுப்பில் ஏதும் நடந்துச்சான்னு மலர் கிட்ட அவளோட அம்மா கேட்டிருக்காங்க.

மோனா வகுப்பில் முதன்மை வகித்த மாணவி அல்ல. ஆனால் நிறைவான மதிப்பெண்கள் பெற்று விடுவதால் ஆசிரியர்களின் கோபக்கனலில் இருந்து எப்போதும் தப்பிவிடுவாள். அவள் நடன அசைவுகளுக்கு பல ரசிகர்களை கொண்டிருந்தாள். அதில் டீனாவும் அவள் நண்பர்களும் கூட அடக்கம். கல்லூரியில் அங்கும் இங்குமாய் துள்ளி திரிந்தவளாயிற்றே. டீனாவால் ப்ரியா கூறுவதைக் கற்பனை கூட செய்ய முடியவில்லை.

அவளை சுற்றி ஏதோ பேய் இருப்பதாக சொல்லியிருக்கா. வீட்டில் இருக்கவங்க கூட பேச மறுத்து தனியாவே இருந்திருக்கா.

பேயா?? அதிர்ச்சியில் உறைந்தாள் டீனா.

பாவம் அவளை பெத்தவங்க.. அவங்க மகளோட இந்த நிலைக்கு கல்லூரியில் தான் பதில் கிடைக்கும்னு நம்புறாங்க.

"நீ நினைக்குறது புரியுது ப்ரியா", இடைமறித்தாள் டீனா. அவளை மீட்டெடுக்கவாவது நம்ம கல்லூரிக்கு திரும்பி போகணும்.

சென்னையில்..

"கல்லூரிக்கா ?? நான் போக மாட்டேன். என்னால முடியாது..", கண்கள் சிவக்க இரு கைகளால் முகத்தை பொத்திக்கொண்டே கதறினாள் மோனா.

எழுதியவர் : மது (9-Jul-18, 2:04 pm)
பார்வை : 1953

மேலே