கண்ணதாசன்

கண்ணதாசன்
இவன் சிவகங்கையில்
பிறந்த கவி கங்கை
சிகாகோவில்
இறந்த சிந்தனைக் கோ

இவன் கொடிகட்டிப்
பறந்தது பாட்டினால்
இவன் குழிவெட்டி
இறந்தது பாட்டிலால்

மதுவை
அவன் அருந்திவிட்டு
அதன் கவி போதையை
நமக்கு விருந்தளித்தான்

கவிமலை சரிந்ததன்
காரணம் இவன் மதுவருந்தியது
கவிமாலை நம்மால்
கசங்கியதைக் கேட்டு
மது வருந்தியது

எட்டாவதே படித்தான்
யாரும் எட்டாக் கவி படித்தான்
கண்ணனைப்போல்
எட்டாவதாய் உதித்தான்
பாமரன் எட்டும் கவி உதிர்த்தான்

இவன் சாத்தப்பன்
இசைத்த பண்
விசாலாட்சியின் சன்
கண்ணதாசன்
கவிஞர்களுக்கு ஒளிதரும் சன்

இவன் சிறு கூடல் பட்டியில்
பிறந்து பட்டி தொட்டி எல்லாம்
மக்களை
தன் பாட்டுப் பட்டியில்
அடைத்தவன்
இவன் பேனாவால்
பா நாவால்
தமிழுக்கு உயிர் கொடுத்துவிட்டு
மரணப்பெட்டிக்குள் அடைந்தவன்

இவனின் மூன்று தாரத்தினும்
மூலாதாரம் தமிழ்

இவன்
குடியிருந்தது கோப்பை
இவனால் புகழால் நிரம்பியது
எம் ஜி ஆர் என்னும் கோ பை
குழிபறித்து யாருக்கும்
வைத்ததில்லை ஆப்பை
பதிவிறக்கம் செய்யுங்கள்
இவன் கவித்தேன் பருக
கண்ணதாசன் கவிதைகள் எனும் ஆப்பை

உன் எதுகை மோனைக்கால்
படித்தால் யானைக்கால்
வந்தவனும் எழுந்துநடப்பான்
உன் பாட்டு நாலடி கேட்டு
உன் காலடி விழுந்து கிடப்பான்

கவிஞர்களின்
மன்ன தாசனே
நீ ஆயர்பாடியில்
பூக்காது அன்னைமடியில்
பூத்த கண்ணதாசனே

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
உடனே செல் நிம்மதி நாடி என
சொன்னதாசனே
பலவண்ணக் கவி
புனைந்த வண்ணதாசனே

துயரில் கவிபாடி நின்ன தாசனே
தமிழுக்கே உணவளித்த அன்ன தாசனே
ஆரம்பத்தில் நீ அண்ணா தாசனே
மலைபோல் சிந்தித்த எண்ண தாசனே
எங்களை இப்படி
தமிழ் நாட்டில் தமிழ் காட்டில்
தவிக்கவிட்டு சென்றுவிட்டாயே
இது நியாயமா என்ன தாசனே ?


எழுதப் படிக்கத் தெரியாதவன்
அல்ல எமன்
நன்கு படிக்கத்தான்
இந்த கவிதை நூலை
பூலோகத்திலிருந்து
தன் நூலகத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டான்

எழுதியவர் : புதுவைக் குமார் (11-Jul-18, 7:36 pm)
Tanglish : kannadhaasan
பார்வை : 508

மேலே