நள தமயந்தி – சுவையான காதல் கதை

ஹிந்து வேதத்தில் வரும் கதை நள-தமயந்தி கதை.

மஹாபாரதம் அதை விரிவாகச் சொல்கிறது.

நளன் பேரழகன். தமயந்தி பேரழகி.

அழகு என்றால் விண்ணவர் வியக்கும் அழகு.

இந்தக் கதையைப் பல கவிஞர்களும் பாடியுள்ளனர்.

நைஷதம் அழகிய வடமொழிக் காவியம்.

அதைத் தமிழில் தந்தார் அதிவீரராம பாண்டியன்.

இவர் இருந்து அரசாண்ட நகர் கொற்கை.

இவருக்கு வல்லபதேவன், பிள்ளைப்பாண்டியன், குலசேகரன், குணசேகரவழுதி, தமிழ் வளர்த்த தென்னவன் எனப் பல பெயர்கள் உண்டு.

சற்று – சற்று என்ன – அதிகமாகவே சிற்றின்பப் பிரியர்.

ஆகவே தான் கொக்கோக முனிவர் வடமொழியில் எழுதிய கொக்கோக நூலைத் தமிழ்ப் படுத்தினார்.

கந்தபுராணத்தில் வரும் இந்திரபுரிப் படலத்தில் கூறப்பட்ட மதனாகமவியல்களைத் தமிழ்ப் படுத்தி மதனக் கோவை என்ற நூலை இயற்றினார்.

ஒவ்வொரு பாடலும் சிருங்காரச் சுவையில் தோய்த்து எடுக்கப்பட்ட பாடல்.

பெண்களின் அங்கங்களை வர்ணனை செய்வதில் இவருக்கு ஈடு இணை கிடையாது.

நளனும் தமயந்தியும் ஒருவர் பால் மற்றொருவர் கொண்ட காதலுக்கு ஈடு இணை கிடையாது.

தமயந்தி நளனையே நினைத்து உருகினாள். நளனோ தமயந்தியையே நினைத்து உருகினான்.

இரண்டே இரண்டு பாடல்களை இங்கு பார்ப்போம்:

தமயந்திக்கு ஒரு பொழுது போக்கு. நளன் எப்படி இருப்பான் என்பதை நினைத்து நினைத்துப் பார்ப்பது தான் அது.

ஒரு நாள் ஓவியத்தில் வல்லவனான ஒருவனை அழைத்தாள். ‘அழகில் சிறந்த பேரழகன் ஒருவன் சித்திரத்தையும் அவனுக்கு இணையான பேரழகியான கன்னி ஒருத்தி படத்தையும் வரைக’ என்று ஆணையிட்டாள்.

ஓவியன் தன் திறமை அனைத்தையும் காட்டி இரு சிறந்த அங்க லாவண்யங்கள் கொண்ட அழகனையும் அழகியையும் வரைந்து காட்டினான்.

அதைப் பார்த்த தமயந்தி ஓவியனை அனுப்பி விட்டு அந்தப் படத்தை எடுத்துக் கொண்டாள். அந்தப் படத்தில் இருந்த அழகனும் அழகியும் நளனுக்கும் தமயந்திக்கும் அழகில் சற்றும் ஈடு கொடுக்க முடியாது என்ற போதிலும் அதை நள தமயந்தியாகப் பாவித்து மெய் சிலிர்த்தாள்.

இதை அதிவீரராம பாண்டியன் கூறுகிறார் இப்படி:


ஓவியத் துறைகை போய வொருவனை யுருவின் மிக்க

காவல னொருவன் மற்றோர் கன்னிநீ தீட்டு கென்னத்

தாவரு மெழிலிற் கோட்டத் தானுமந் நளனுமாக

மேவர வினிது நோக்கி மெய்ம்மயிர் பொடிக்கு மன்றே.

(அன்னத்தைக் கண்ணுற்ற படலம், பாடல் 75)


வெறும் சித்திரத்தைக் கண்டு மெய்ம்மயிர் பொடிக்கும் அளவில் அவள் ஆனந்தப் பட்டாள்.

தங்கள் தலைவி தமயந்தியின் காதலை அனைத்து தோழிகளும் நன்கு அறிவர். அவர்கள் அவளைக் கிண்டல் செய்து சீண்டி விளையாடுவது வழக்கம்.

அவள் இல்லாதபோதும் நள தமயந்தி காதல் அவர்களுக்கு ஒரு பொழுது போக்கு விளையாட்டானது.

தோழிகளில் ஒருத்தி தமயந்தியாகவும் இன்னொருத்தி நளனாகவும் ஆகி இருவரும் ஒருவரை ஒருவர் தழுவி மகிழ்வர்.

இந்த ஆலிங்கனத்தோடு கலகலவென்று சிரிப்பொலி எழும்.

இதையும் அதிவீரராமபாண்டியன் அழகுறச் சித்தரிக்கிறார்.

நளனோ மஹா அழகன். அவன் அழகின் வர்ணனையைக் கேட்ட தேவலோக இந்திராணியின் முலை சிலிர்த்ததாம்.

இந்திரனோ தமயந்தியின் அழகை நாரதர் வாயிலாகக் கேட்டு நேரடியாக சுயம்வரத்திற்கே வருகிறான்.

நளன் அன்னம் வாயிலாக தமயந்தியின் அழகு வர்ணனையைக் கேட்கிறான்.

தமயந்தியிடம் அன்னம் வந்து சொல்கிறது இப்படி:

“வேற்படையை உடைய நள மஹாராஜன், ஓவியர்களால் எழுதற்கு அரிய உனது அழகிய வடிவத்தை, தன்னால் சம்பாதிக்கப்பட்ட பலவகையான மணிகளைப் பதித்து எழுதுகிறவன். உன் கனதனங்களை உள்ளதை உள்ளபடியே எழுதுவதற்கு இப்படத்தில் அகலம் போதவில்லை என்றும், பூங்கொடி போன்ற உனது அழகிய இடையைத் தீட்ட தூரிகைக் கோலின் நுனியானது கூர்மை இல்லை என்றும் எண்ணித் திகைக்கிறான். ஆகையால் உன்னை விரும்பி மனத்தில் எண்ணி அவனது நெடிய அழகிய கண்களானவை இமைக்காமல் உன் உருவத்தைப் பார்க்க அதனால் மனம் வருந்துகிறான்.

நைடதம் கூறும் பாடலைப் பார்ப்போம்:


ஈட்டு மணிகள் பலதெளிந்துன் னெழுதற் கரிய திருவுருவம்

கோட்டுங் கிழிதான் முலைகோட்டப் பரப்பின் றென்னுங் கொடிமருங்குல்

தீட்ட வனைகோ நுதிநுண்மை யிலதென் றெண்ணித் திகைக்குமுளம்

வேட்டு நெடுங்கண் ணிமையாம னோக்கித் தளரும் வேல்வேந்தே”

(அன்னத்தைத் தூது விட்ட படலம் பாடல் 254)

நளன் பற்றிய வர்ணனையும் தமயந்தி பற்றிய வர்ணனையும் படிப்போரை வியக்கச் செய்யும் வண்ணம் உள்ளன.

தமயந்தியின் கூந்தலிலிருந்து பாதம் வரை உள்ள வர்ணனை சிருங்காரப் பிரியர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும்.

நைடதம் புலவர்க்கு ஔடதம்.

சிருங்காரப் பிரியர்களுக்கோ தேவாமிர்தம்!






S நாகராஜன்

எழுதியவர் : (16-Jul-18, 7:49 pm)
பார்வை : 202

மேலே