கதவை திறடி கண்ணம்மா

கதவை திறடி கண்ணம்மா
காற்று உள்ளே வந்திட
கவலைகள் வெளியேறிட
காவிரிக்கரை காற்று
கண்டதேகம் இது
அல்லிக்கேணியில் புழுங்கிடுதே
அல்லிகள் பூத்திடும் வேளையிலும்...

கதவை திறடி கண்ணம்மா
மல்லிகைவாசம் உலவிடட்டும்
வறுத்து அரைத்த காபியின்
வாசனையை முந்திக்கொண்டு...

கதவை திறடி கண்ணம்மா
தயிர் காரிகையின் கூவலிலே
மோர் அருந்திடும் மனமும்
வெயிலில் ஜோராக குளிரட்டும்
குழந்தைபோல் அவளை தொடரும்
நிழலும் நம் திண்ணையிலே
இளைப்பாறிட...

கதவை திறடி கண்ணம்மா
கருவாட்டு வாசமதை அள்ளிக்கொண்டு
வரும் கடல் காற்றுக்கு இசைந்து...

கதவை திறடி கண்ணம்மா
மயிலை கபாலியை காண
புறப்படுவோம் வியர்வை
மழைதனில் குளித்துக்கொண்டு...

கதவை திறடி கண்ணம்மா
புழக்கடையின் நேசமதை கொண்டாட
அங்கே சிட்டுகளிடம் கொஞ்சிப்பேச
குற்றங்கள் காணும் மனமதை
வெள்ளாவியில் வேகவைக்க
தாம்பூலம் தரித்தபடி கதை பேச
மீண்டும் ஒருமுறை கும்பகோணத்து
சீவலை வாய்கொள்ளாது ருசிபார்க்க
வெந்த நெல்லின் தஞ்சைவாசம்
மனதை நிறைக்க வயிறும் மகிழ...

கதவை திறடி கண்ணம்மா
நாம் ஈருடல் ஓர்உயிராய் இணைந்திருக்க
உள்ளே வரும் காற்று
வீணையென நினைத்து சுதி சேர்க்க
கச்சேரி களைகட்ட ம்ம் இன்னும்
கதவை திறடி கண்ணம்மா!!!

எழுதியவர் : மேகலை (20-Jul-18, 2:36 pm)
சேர்த்தது : மேகலை
பார்வை : 103

மேலே