தேநீரின் காதலன் ஒரு டீ சாப்பிடலாமா

அவளின் அறிமுகம் என்னவோ
எந்தன் தாத்தனால் நிகழ்ந்ததாய்
அவரே எத்தனையோ முறை
கூற கேட்டிருக்கிறேன்
அவள் மீதான
என் காதல் கண்ட -அவரின்
வெறுப்பின் வெளிப்பாடு.

மீசை அரும்புமுன்னே
முளைத்தது
அவள் மீதான காதல்
முதலில் சற்று தயங்கியே
பழகியதாய்-- என் நினைவு
இன்னும்
அவளின் உறவிலிருந்து
விடுபட விருப்பமில்லை...

எரிக்கும் கோடையிலும்
உதறும் குளிரிலும்
சிலிர்க்கும் மழையிலும்
கொல்லும் சோகத்திலும்
கொண்டாடும் மகிழ்ச்சியிலும்
மனது அவள் சூடு தேடும்.

விரலால் நுனி பிடித்து
உள்ளங்கையில் சூடு பரப்பி
முகமருகில் நிறுத்தி
மணம் முகர்ந்து
மெல்ல இதழ் பதித்து
முதல் பருகுதலின் சூடு
குரல்வளையில் இறக்கி
விடும் வெப்ப மூச்சின்
சூட்டை விரும்பியே
கிடக்கிறது மனம் -அவளின்
மறு வருகைக்காக்க

நீண்ட இரவின்
முடிவும்
நீள போகும் பகலின்
தொடக்கமும்
அவளே ஆகிவிட்டால்...
அவளில் தொடங்கி
அவளில் முடிந்து போகிறது
என் நாட்கள்
ஒரு தேநீர் காதலனாய்!

இப்போதெல்லாம்
என் மனையாளே
எனக்காக தயார்
செய்கிறாள் - ஒரு நெடிய
கோபத்துடன் எனக்கான
அவளை! (தேநீரை!)
இன்னும் நான்
அவளை (மனையாளை)
விரும்பும் படி.

எழுதியவர் : இளவரசன் கி (28-Jul-18, 8:13 pm)
சேர்த்தது : இளவரசன் கி
பார்வை : 78

மேலே