இறையனார் பாடல் குறுந்தொகை-2
இறையனார்
மதுரையில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுளே இறையனார் என்னும் புலவர் எனக் கூறுவர். திருவிளையாடற் புராணம், கடம்பவன புராணம், தமிழ்விடுதூது போன்ற பிற்கால நூல்களில் சிவன் தருமிக்குப் பொற்கிழி கிடைப்பதற்காகக் ‘கொங்கு தேர் வாழ்க்கை’ எனும் பாடலைப் பாடிக் கொடுத்தார் எனக் கூறப்படுவது காணலாம்.
திணை : குறிஞ்சி
கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோநீ யறியும் பூவே.
என்பது, இயற்கைப்புணர்ச்சிக்கண் இடையீடுபட்டு நின்ற தலைமகன், தலைமகளை நாணின் நீக்குதற்பொருட்டு 'மெய்தொட்டுப் பயிறல்' முதலாயின அவண்மாட்டு நிகழ்த்திக் கூடித் தனது அன்புதோன்ற நலம் பாராட்டியது.
---------------
செய்தி
அவனைப் பார்த்த அவள் நாணி ஒதுங்கினாள். அவன் அவளைத் தொடவேண்டும். அதற்கு ஒரு சாக்குபோக்காகச் சொல்வதாக அமைந்துள்ள பாடல் இது. தும்பியே! உனக்கு அழகிய சிறகுகள். உனது வாழ்க்கை தேனைத் தேடி எடுத்துக்கொள்வது. உனக்குத் தெரியும் எந்தப் பூ அதிக மணம் என்று. இவள் தலையில் சூடியுள்ள பூவை மொய்க்கும் ஆசையால் சொல்லிவிடாதே. இவள் கூந்தலைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூ நீ அறிந்தது உண்டா?
இவன் அரிவை. செறிந்த எயிறுகளில் புன்னகை பூக்கிறாள். மயில் போல் மெல்லமெல்ல ஆடி அசைகிறாள். (விலக மனமில்லை) இவள் என்னிடம் ஏதோ பயின்றிருக்கிறாள். அது ஒட்டுறவு உள்ள நட்பாகத் தெரிகிறது. (அது உடலுறவாக மாறவேண்டும்
--------------
கூற்று : இயற்கைப் புணர்ச்சியின்போது தலைவன் தலைவியின் நாணம் நீங்குவதற்காக, மெய்தொட்டுப் பயிறல் (உடலைத் தொட்டுப் பழகுதல்) முதலிய செயல்களைச் செய்து, அவள் மீதுள்ள அன்பு தோன்ற அவள் நலம் பாராட்டுதல் (நலம் = அழகு).
இப்பாடலில் தலைவன் தலைவியின் கூந்தலில் அமர்ந்துள்ள வண்டைப் பார்த்துப் பேசுவதுபோல அவள் அழகைப் பாராட்டுகிறான். வண்டை விரட்டுவது போலத் தலைவியின் தலையைத் தொடும் குறிப்பு இருப்பதால் மெய்தொட்டுப் பயிறல் துறையும் இப்பாடலுக்குப் பொருந்தும் எனலாம். இப்பாடல் தலைவன் கூற்று.
தலைவன் தலைவி கூந்தலில் அமர்ந்துள்ள வண்டை நோக்கிப் பேசுகிறான் “அழகிய சிறகுகளையுடைய வண்டே! தேனைத் தேடி ஆராய்ந்து உண்பதையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கிறாய். ஆதலால் நீ சொல்! என் மன விருப்பம் அறிந்து எனக்காக ஒருதலைப் பட்சமாகச் சொல்ல வேண்டாம்; உன் அனுபவத்தில் நீ கண்டுணர்ந்த உண்மையையே சொல். என் தலைவி பல பிறவிகளிலும் என்னோடு காதல் உறவு பூண்டு நெருங்கிய பேரன்பினையுடையவள். மயில் போன்ற சாயலைக் கொண்டவள். அழகிய பல்வரிசையை யுடையவள். நீ அறிந்துள்ள பூக்களுள் இவளது கூந்தல் போலச் சிறந்த நறுமணமுள்ள பூக்களும் உண்டோ?
மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே
(மயிலியல் = மயில்போன்ற சாயல். சாயல் என்பது இன்னது என உணர்த்த முடியாத அழகு. அது அழகின் மென்மை. உடலின் சிறு சிறு அசைவுகளில் தோன்றும் அழகு, செறிஎயிறு = செறிவான பல்வரிசை)
இயற்கைப் புணர்ச்சியில் இப்போதுதான் கண்டு புதிதாகப் பழகும் தலைவன், பல பிறவிகளிலும் அவளே தன் காதல் இணையாக இருந்தவள் என உணர்த்துவதன் மூலம் தலைவியின் உள்ளத்தில் ஒரு பாதிப்பை உருவாக்குகிறான். அவள் மனத்தில் ஒரு தெளிவு ஏற்பட்டு அவள் அவன்மீது நம்பிக்கை கொள்ளப் பயிலியது கெழீஇய நட்பு என்னும் தொடர் உதவும், ‘பயின்று பல பிறவிகளிலும் சேர்ந்த நட்பு’ என்பது பொருள்.
தலைவியின் கூந்தல் நறுமணத்தைப் பற்றித் தீர்ப்புரைக்கத் தகுதியானது தேன் உண்ணும் வண்டு. “கொங்குதேர் வாழ்க்கை”யையுடைய வண்டு! ‘ஒருதலைப்பட்சமாகச் சொல்லி விடாதே’ என்று தலைவன் வண்டினிடம் சொல்வதற்குக் காரணம், அது அவனது மலைப்புறத்து வண்டு என்பதாகும். இக்குறிப்பின் மூலம் தலைவிக்குத் தலைவன் குறிப்பாக உணர்த்த விரும்புவது அவனது ஊரும் தொலைவில் இல்லை, அருகில்தான் உள்ளது என்பதாகும். இக்குறிப்பும் தலைவிக்கு ஒரு நம்பிக்கை உருவாக்குவதாகும்.
இப்பாடலைத் தொடர்புபடுத்தும் புராணக்கதை ஒன்று உண்டு. அதற்கு ஒரு காரணம் பாடலைப் பாடிய புலவர் பெயர் ‘இறையனார்’ என்றிருப்பதாகும். தன் தேவியின் கூந்தல் மணம் இயற்கையானதா எனச் சிந்தித்த பாண்டிய மன்னன் தன் ஐயம் இன்னதென்று வெளிப்படுத்தாமல், அதனைத் தீர்க்கும் புலவனுக்கு ஆயிரம் பொன் பரிசு தருவதாக அறி்வித்ததும், தருமி என்ற ஏழைப் புலவனுக்கு உதவச் சிவபெருமான் “கொங்கு தேர் வாழ்க்கை” என்ற பாடலைப் பாடித் தருமிக்கு வழங்கியதும், அரசவையில் நக்கீரர், பாட்டில் பொருட்குற்றம் இருக்கிறது என்று சொல்லிப் பரிசைத் தடுத்ததும், சிவன் வந்து வாதாடியும் ‘குற்றம் குற்றமே’ எனப் பிடிவாதம் செய்ததும், சிவனின் நெற்றிக் கண்ணால் சுட்டெரிக்கப்பட்டதும், பின் சாப விடுதலை பெற்றதும் திருவிளையாடற் புராணத்தில் விரிவாகச் சொல்லப்படுகின்றன.
தொகுப்பு tuv