வாய்க் கட்டப்பட்டவனின் மனப்புலம்பல்கள்

அழகென்ற திமிர் அறுந்து போகும்,
காலச் சக்கரத்தில் முதுமை வரும்,
ஆயிரம் பேரை திரும்பி பார்க்க வைத்து பின்னால் அலைய வைத்த பெண்ணின் உடலும் உயிர் பிரிந்தாலே பிணமென்றே ஆகும்.

ஆகுமோ என்றே அடுக்குமொழி பேசுகையில் ஆணென்ன? பெண்ணென்ன?
சதையை சிற்றுயிர்கள் உணவாக்க மிஞ்சி நிற்பதோ வெறும் எலும்புக் கூடு.
தீயிலிட்டால் அதுவும் மிஞ்சாது.
சாம்பலை கரைத்தே ஆன்ம சாந்தியடைய உன் சந்ததியும் வேண்டுமே.

வேண்டும் வேண்டாம் என்றே விருப்பு, வெறுப்புகள் பல இருந்தால் நாடி தளர்ந்த நேரம் கையில் தடி ஊன்றியே ஆக வேண்டும்,
கையில் தடியூன்றாக் காலத்தே கடைந்தேறும் உயிர்கள் பல,
வாழும் காலம் கொஞ்சமே,
அதில் மனிதன் ஆடிடும் கணக்கில் அடங்காது மிஞ்சுதே.

மிஞ்சியதை தெருவில் நாய்க்கிட்டால் நன்றியோடு வாலாட்டுமே,
மொத்தத்தை உண்ணும் இம்மனிதர் இடையே ஏது நன்றியுணர்வு?
அகந்தையில் கழித்திடுவார் வாழ்வை,
புற அழுக்கை நீக்கினும் அக அழுக்கு கூடி மனம் குப்பையாகக் கண்டேனே.

கண்டதும் கலங்கி கவலையால் கருத்துக்களைத் தேடி நானும் நவின்றிட,
எல்லாம் அறிந்தது போல் பேசாதே என்று அறிஞர்க் கூட்டத்தில் வாய்க் கட்டிட்டு அமர்த்தப்படுகிறேனே.
ஓம் நமச்சிவாய.
ஓம் நமச்சிவாய.
ஓம் நமச்சிவாய...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (13-Aug-18, 7:49 pm)
பார்வை : 1658

மேலே