சத்தியமாய் இது சுதந்திர நாடுதான்
இதன் கடைசி வரி
உங்களுடையதாய் இருக்கட்டும்
சத்தியமாய் இது சுதந்திர நாடுதான் . . .
இங்கே
ஸ்டெடர்லைட்டுக்கு எதிராக போராடினால்
சுட்டு கொல்ல படுவீர்கள்
எவனோ சாலை அமைக்க
என் நிலத்தையும் வீட்டையும்
என் வாழ்க்கையையும்
பிடுங்குவதை ஏன் என கேட்டால்
கைது செய்ய படுவீர்கள்
காரணமின்றி கைது செய்யவும்
குண்டர் சட்டம் போடவும்
தேச விரோத சட்டம் பாயவும்
எளிதில் அனுமதி உண்டு
இங்கு போராட்டம் நடத்தவும்
மனு கொடுக்க செல்லவும்
பல இடங்களில் அனுமதி இல்லை
தர்ம யுத்தங்களை தவிர்த்து
ஆயினும்
சத்தியமாய் இது சுதந்திர நாடுதான் . . .
கோடி கணக்கில் கடன் பெற்று
வெளிநாடுகளுக்கு தப்பி
செல்லலாம்
பெண்களோடு சேர்ந்து
செல்பி எடுத்தும் போடலாம்
விவசாய கடன்களுக்கு மட்டும்
கைதுகள் தொடரும்
கற்பழித்தால் தையல் இயந்திரத்தோடு விடுதலை கிடைக்கும்
வருமான வரி சோதனையின் பின்
எப்போதும் அரசியல் இருக்கும்
சிறையில் மின்கம்பியை கடித்து
தற்கொலை செய்து கொள்ள முடியும்
தர்மாகோல் போட்டு
நீர்நிலையை பாதுகாக்க முடியும்
ஆலைய கழிவுகளால் தோன்றும்
நுரையை கூட
குளிப்பதால் வரும் நுரை என்று
சமாளிக்க முடியும்
கம்ப ராமாயணத்தை எழுதியது
சேக்கிழார் என்று
பொது வெளியில் பேசிட முடியும்
ஒரு முதல்வரின் மரணத்தில் கூட
மக்களை குழப்பி விட முடியும்
சிலைகளை கடத்தி
காசு பார்க்க முடியும்
ஓட்டு போடுவதற்கு
காசு கொடுக்கவும்
டோக்கன் கொடுக்கவும் முடியும்
அரசு அலுவலகங்களில்
தாராளமாய் லஞ்சம் வாங்க முடியும்
தொலைக்காட்சி விவாதங்களினால்
பேசி பேசியே பல சம்பவங்களை
திசை திருப்ப முடியும்
உண்மையை சொன்னால்
ஆன்ட்டி இந்தியனாய்
நம்மை அடையாள படுத்த முடியும்
இவ்வளவு சதந்திரம் இல்லையென்று
யாராலும சொல்ல முடியுமா
தயவு செய்து நம்புங்கள்
சத்தியமாய் இது சுதந்திர நாடுதான் . . .
உண்மைதானே