பழம் பெறும் கத்தி
பழம் பெறும் கத்தி!
என்னைக் கத்தியென வர்ணிக்கும்
என் இனிய தர்ப்பூசணிப் பழமே!
நான் உன் மீதோ நீ என் மீதோ
விழுந்தால் வெட்டுப்படுவாய்
என்றா அங்கலாய்ப்பு உனக்கு?
நான் அன்புக் காகிதத்திலான
அபூர்வக் கத்தி. ஆசைப்படுவாய்!
வெட்டுப்படவோ குத்துப்படவோ
இங்கு நமக்கு ஒன்றுமில்லையே!
கட்டுப்பட்டு ஆனந்தம் என்றும்.
விட்டுப்போகவும் நட்டப்படவும்
வாய்ப்பே எதுவும் கிடையாதே!
தர்ப்பூசணியே! என் காதலால்
பொட்டலமிடப்பட்ட பொக்கிஷமே!
இன்ப விலங்கு இட்டதால்
அடைபட்டும் மனம் சுதந்திரப்பட்டு,
சூடேறியும் மனம் குளிர்ந்து,
கண்ணீர் சிந்தியும் ஆனந்தப்பட்டு,
இதயம் பிசைந்ததில் எங்கள்
இன்பம் வேறு வரையறையுற்று,
கவிதைப் பொய்களுக்காகவெனப்
பல உண்மைகளை மாயையென
மனத்துக்குக் கற்பித்துக் கொண்டு
பழமும் கத்தியும் அன்பு பழகிப்
பிழியாது இனிய சாறூரக் கற்கும்!
கத்திக்கேங்கிக் கிட்டாமல் போகும்
பாவப்பட்ட பழமாவதில் லாபமா?
நான் தர்ப்பூசணித் தோட்டத்தில்
தனித்து வாழ்கின்ற கற்புக்கத்தி.
கத்தியாசையில் சில பழங்கள்.
வெட்டு குத்து பழக்கமற்ற கத்தி.
அன்புக் கத்தி உனக்காக மட்டும்.