நிலவு இல்லாத வானம்---பாடல்---

மைனாவே மைனாவே இது மெட்டில் :

பல்லவி :

உமையாளே உமையாளே ஏன் இந்த சாபம்...
விளையாத நிலமானேன் ஏன் இந்த சாபம்...

காலம் கேள்வி கேட்கவே தேகம் தீயில் வேகுது...
சூலம் ஏந்தும் வார்த்தையில் காயம் பட்டு சாகுது...

பார்க்கவில்லையோ?... விழி பார்வை இல்லையோ?... (2)

உமையாளே...

சரணம் 1 :

கருவறை தவம் கொண்டு
நான் தினம் காத்திருக்க
நுரையீரல் காற்று நீங்கும் மாயம் கண்டேன்...

தொட்டில் ஆட்டும் நூல் சேலை
பிள்ளை தூங்க வழியில்லை
நான் தூங்க உடல்மீது போர்த்தக் கண்டேன்...

வேசம் போட்டு பாசம் காட்டும்
சொந்த உறவின் உண்மை கண்டேன்...

மார்பில் பாலூட்டி தாலாட்டும் நாள்தான் என்றோ?...

உமையாளே...

சரணம் 2 :

அம்மா எனும் குரல் கேட்க
நெஞ்சம் ஏங்கி தவிக்கின்றேன்
கானல் போல் ஆசை தூரம் போனதிங்கு...

தாரம் ஒன்றை அணிந்தாலும்
தாலி மட்டும் சுமக்கின்றேன்
பாறை போல் வாழ்க்கைப் பாரம் ஆனதிங்கு...

வாழ்வில் நூறு விரதம் கொள்ள
தாய்மை பூக்கும் கனவைப் பெற்றேன்...

மார்பில் பாலூட்டி தாலாட்டும் நாள்தான் என்றோ?...

உமையாளே...

எழுதியவர் : இதயம் விஜய் (21-Aug-18, 2:49 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 1593

மேலே