அம்மான்னா யாரு
(பேச்சு வழக்கில் எழுதப்பட்டது )
பத்து மாசஞ் சொமந்தவளே
என்ன பத்தரமா படச்சவளே...
மசக்கையா நீ இருந்து
என்ன மாணிக்கமே பெத்தவளே..
வாந்தி
மயக்கம்
சோர்வு
என பல துயரம் நீ தாங்கி
இந்த சின்னக்கருவ சிலாயக்குன...
ஒன்னையே போர்க்களமாக்கி
அதுலயும் தனியாவே போராடி
சொதந்தரமா என்னப்பெத்து
சுந்தரனா வாழவச்ச!
பாசத்தால பணியவச்ச!
எல்லாரும் என்கிட்ட சொல்லுராங்க
நான் பொறக்கலான
உனக்கு "மலடி" னு பேரு வந்துருக்குமாம்
என்னத்த நாஞ் சொல்ல
முட்டாப்பய மக்களிடம் ..?
நீ என்ன சொமக்காட்டி
இந்த மண்ணுல நா எப்படி வந்துருப்பா ?
கொஞ்சமா... நஞ்சமா...
உன்ன நா படுத்துன பாடு..
கருவுலையாவது பரவால்ல
பத்து மாசம் தா ..
இப்ப முப்பது ஆச்சு .
இன்னு என்ன தொலைச்சுடாம
ஓ நெஞ்சுக்கூட்டுல வச்சுருக்க !
இடுப்பு வலியத் தாங்கி..
அடுப்பு ஊதி என்ன வளர்த்த ..
நான் சிரிக்க அழுக
காரணம் நெறையா இருக்கு..
ஓஞ் சிரிப்பை பாக்கத்தா
ஒரு பயலும் இல்லை..
நீ அழுக காரணமா தேவ?
ஆனா
ஒஞ் சிரிப்புக்கு நாம் மட்டுந்தா தேவ!
தவந்து வந்து கண்டதை திங்கயில
உண்டத விட்டுட்டு ஓடி வந்த பாதியில ..
நடவண்டி நடந்து பழகயில
தொடர்வண்டியா தொடர்ந்து வந்த ..
நாம்படுத்தும் பாட்டுக்கு
என் நிழலுங்கூட கொஞ்ச ஓய்வெடுக்கும் ..
ஓயாம ஓடி வந்து
என்ன ஒசத்திப்பாத்தவலே...
கொஞ்ச வெவரம் தெரிஞ்சதுமே..
கழுத்து காதுல இருக்கறத கழட்டி
என்ன கான்வென்ட்டுல படிக்க வச்சவளே ..
பாவி மய எனக்குத்தா
படிப்பேதும் வரலையே..
விட்டயா நீயும்
மிச்ச மீதி கழட்டி
டூசனுக்கம் அனுப்பி வச்ச ..
நெல்லுச்சோறு நீ பாத்து
மாசம் பல மாசமாச்சு ..
எனக்குப் பல்லு மொளைக்கத்தான்
நெல்லு வாங்கி கீறி விட்ட ..
ஓட்ட சட்டியில சமைச்சாலும்
ஓட்டல் சாப்பாட்ட மறக்கடிக்க ..
ஒட்டுப்போட்டு ஓஞ் சேலையிருக்க
நெறய துட்டுப்போட்டு துணி கொடுத்த..
முள்ளுக்குத்தி நொண்டி நொண்டி
நீ வந்த
பேட்டா செருப்பு வாங்கி
ராசா நடய ரசிச்ச..
ஒரு கானி நெலத்துல,
சிறு கூர காத்துல,
மேயருக்கு அஞ்சனா இல்லாம
அஞ்சு நாளா
நீ அழுததென்ன,,
மொடங்கிப் படுத்தாலும்
முட்டிக்கிற நம்ம ஊட்டுல..
எனக்கு மட்டும் பாசமாய் பாயப்போட்ட ..
ஓந் தூக்கத்தையும் காயப்போட்ட !
வெய்யிலுல நா நடந்தா
ஏங் காலு நோகுமுன்னு
இடுப்புல என்ன வச்சு
இமயத்தை காட்டியவளே..
பொதி சுமக்கும் கழுதைக்கும்
பழைய கஞ்சிச் சோறிருக்கும்
என்ன விதி நொந்துச்சோ
வயித்துக்கு வந்த வென..
காட்டு மேட்டுல வேலை செஞ்சு
என்ன காலேஜும் சேத்துவிட்ட..
என் படிப்பு முடிக்கரக்குள்ள
உன் துடிப்பும் அடங்கிடுச்சே ..
கண்ணுத்தண்ணியும் நின்னு போச்சு ..
என் கருத்த அம்மா களவு போச்சு..
பொதக்குழிக்கு நா போனாலும்
என் நெஞ்சுக்குழிய நீ இருப்ப
அம்மா