அப்பா அன்புக்குள் வா---பாடல்---

மலையோரம் வீசும் காத்து மெட்டில் :

பல்லவி :

விழியோரம் தோன்றும் நேசம்
விதியோடு மோதும் பாசம்
தோற்குதே... தோற்குதே... (விழியோரம்...)

தேடாதே போதை வாசல் போகாதே வேண்டாமப்பா
உள்ளத்தின் பாதை மாறும் துன்பந்தான் மாறாதப்பா
அன்பாக நான் சொல்லக் கேட்டு வாழப்பா...

விழியோரம்...


சரணம் 1 :

பாய் விரிக்கும் வீட்டுக்குள் பால் குடித்தல் ஆகாதோ?...
தாய் வடித்த சாதந்தான் வாய் வெடித்தல் தீராதோ?...

தண்ணீரில் பூவாய் நீ தள்ளாடி வாராய்...
கண்ணீரில் வாழும் மனக் காயங்கள் தாராய்...

மதுவாசம் நீங்கிடாதோ?... மகள் பாசம் தோன்றிடாதோ?...
எந்நாளும் போதை என்றால் நம் வாழ்க்கை நாறிடாதோ?...
உன்னாலே தாயின் பாதம் தீயில் தான்...

விழியோரம்...


சரணம் 2 :

அப்பா என்ற ஆணழகைத் தப்பாகத் தான் மாற்றாதே...
அம்மாவுனைத் திட்டினாலும் கோபம் மட்டும் காட்டாதே...

தேனாகும் போதை பின் நஞ்சாக மாறும்...
அன்பாகும் பாதை அதை ஆன்மீகம் கூறும்...

நெஞ்சோரம் நான் விதைக்கும் நற்கீதை நீ படிக்க
என்னுள்ளே பூமலர்ந்து தாயோடு நான் சிரிக்க
செய்தாலே போதும் வீடும் கோயில் தான்...

விழியோரம்...

எழுதியவர் : இதயம் விஜய் (21-Aug-18, 6:27 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 8038

மேலே