ஆளுமிருள் நீளுதே---நொண்டிச்சிந்து---

நொண்டிச்சிந்து :
கோட்டையி லாயிரம் பேர் - சொல்லும்
கொள்கையில் நஞ்சதும் உள்ளதைப் பார்
மூட்டையி னுள்கோடி தான் - இங்கு
முன்னேறும் மக்களைக் கொன்றிடுந் தான்...
வேட்டியில் மல்லிகை யாய் - நெஞ்சின்
வெண்மையில் காரிருள் கண்டிடு வாய்
ஏட்டையே பார்த்திடா தோர் - நமை
ஏய்த்திங்கு பள்ளத்தில் சாய்த்திடு வார்...
ஆட்டுமந் தைகள்போ லே - தினம்
ஆட்டமுஞ் சண்டையுங் கூட்டத்தி லே
காட்டைய ழிக்குந்தீப் போல் - வாழும்
வீட்டைய ழிப்பார்பொய் ஆட்சியி னால்...
நாட்டையே கூறுக ளாய் - விற்று
நாளுமிங் கேவாழ்வார் நல்லவ ராய்
வேட்டைகள் செய்வதி லே - அந்த
வேடனை விஞ்சுவோர் ஆட்சியி லே...