உன் வாழ்க்கை உன் கையில்---கட்டளைக் கலித்துறை---

கட்டளைக் கலித்துறை :
நதியலை யோடத்தில் ஞான்றும் இலைபோல் நகர்ந்திடாது
விதிவலை தேடியே மீன்றுள்ளி வீழ்வதாய் வீழ்ந்திடாது
விதியவன் மீட்பானே வீண்நினைப் பில்மனம் வீற்றிடாது
மதிவரை யன்ன வருந்தடை வென்றுநில் வாழ்வினிலே...
தேக்கிய வெவ்விடத் தீதான வெண்ணங்கட் சிந்தைவிட்டு
நீக்கிய றத்தினில் நெய்வார்க்குந் தேசுற்று நின்றுயர்வாய்த்
தாக்கிய வின்னற்றீர்ந் தேதண்பூ வின்பந் தளிர்விடவே
ஆக்கையுட் செம்புனல் ஆற்றும் பணியொப்ப வாற்றுடனே...
மேகம் பொழிமழை மேதினி பூங்கமழ் வீசுதற்போற்
சோகங் களைந்துளஞ் சோலை மரைமான துள்ளிடுவாய்ப்
போகந் தருவினை புண்ணாற்றி புத்துயிர் பூண்டுநிற்பாய்
ஆகம் வருத்தி யழிக்கும் புகைம தகற்றிடவே...
களிகூர் மனத்திற் கவலைமுட் பாய்ந்திட்டாற் கண்டகற்றுத்
தெளிநீர் நதியுளஞ் சேற்றின் நிலையாய்த் திருவிழக்கும்
உளிகள் விழுங்கல் உருகொண் டெழுந்தேற்கும் ஓங்குபுகழ்
தெளிந்தே யதன்வழி செவ்வனே வாழ்வை செதுக்கினிதே...
ஓய்வினிற் றோய்ந்தும் உழைப்பதுங் கைவிட் டுலாவருதற்
தேய்பிறை யின்பந் தெரிந்துணர் உன்றன் திறனறிவாய்த்
தாய்மடி துஞ்சுதற் றாரணி வாழ்வுஞ் சளைத்திடாதே
வேய்ங்குழற் சென்றிடும் வீகம்போற் றேனிசை மீட்டிவாழ்வாய்...
வாழ்க்கைத்தேர் ஓட்டிடும் வல்லமை நின்கை வசமதிலே
வாழ்நெஞ்சில் வேரூன்றும் அச்சாணி நம்பிக்கை யாழியென்று
காழ்ப்பற்று ழைப்பதுங் காக்கும்நற் பண்புங் களம்நகர்த்த
வாழ்ந்தின்பத் தேனுண்டு மாசற்று வாழ்வின் வளம்பெறுவாய்...