மெத்தனம்

விருந்துகள் கண்டே
பருந்துகள் பறக்கும்
வருந்துவதால் தீராது
மருந்துகள் வேண்டும்!
அகமலர் சொக்கும்
முகமலர்த் தேடல்களில்
சோகம் சூம்பி
சுகம் கூடிட வேண்டும்!
பொய்மைகளின் புகழ்
வாய்மைகளில் சலவைத்
தூய்மை செய்யப்படும்
வாய்ப்பு வேண்டும்!
எத்திசையும் இங்கு
ஒத்திசைவாய் கூடி
மத்திமம் நிலைபெற்ற
புத்தியும் வேண்டும்!
கொஞ்சு தமிழ் எங்கும்
மிஞ்சியிருக்கையில்
நஞ்சுமொழி பரவலாய்
விஞ்சுவதா வேண்டும்!
பாட்டிகள் சொன்ன
குட்டிக்கதைகள் யாவும்
பெட்டித் திரைகளில்
முட்டுவதா வேண்டும்!
நமக்கென்ன என்று
உமக்கென்ன என்று
ஓரங்க நாடகங்கள்
ஒழிக்கப்பட வேண்டும்!
மெத்தனப் போக்கில்
எத்தனை நாட்கள்
புத்தனாய் பொறுமை
காத்துத்தீர வேண்டும்!
சித்தம் தேய்ந்து
நித்தமும் குறைவீசி
சுத்தமாய் சோக
மெத்தனமா வேண்டும்!
வசவு மொழிகளின்
பிசகு தவிர்த்த
பசப்பு ஒலிகள்
கசப்புகளா வேண்டும்!