நெய்தல் மகள்
நெய்தல் மகள்
கோழி கூவுமுன்னே
சோலிக்கு போகனுன்னு
சொக்காகூட போடாம போனிகளே
கஞ்சி சட்டியில
மிஞ்சிப்போன சோறும்
தொட்டுக்க கருவாடும்
கக்கத்துல மடுப்பட்டியும்
பாக்குக்கூட வெத்திலையும்
சுண்ணாம்பும் மடிச்சி வச்சி
தந்துவுட்டேன்
தலையோட தலப்பாயும்
மலைபோல அலைபாயும்
கடலோட வலைபோட
கரவரைக்கும் வந்துதானே
அனுப்பிவச்சேன்
பொழுது விடியும் முன்னே
பெத்ததுக முழிக்கும்முன்னே
வருவீகன்னு நெனச்சுதானே
தெரு வரைக்கும் வந்து நின்னே
பொழுதும் விடிஞ்சிடிச்சி
பெத்ததுக முழிச்சிருச்சி
மிச்சம் வச்ச சோத்தை
முழுங்க முடியாமே
விக்கல் வந்து தடுக்குதுங்க
மச்சமில்லைனாலும்
மறுநாளு பாடு வரும்
பதறாத பயபுள்ளனு
படிக்காத மேதையா
பக்குவத்தை சொல்லுவீக
கோட காத்து கொடுமையா வீசுதுன்னு
தெக்கு பக்க தெருவுலதான் பேசுறாக
நீவாடு பொறுக்க நிக்கிதுன்னு
மேல் வீடு சம்மாட்டி
மெத்த தெரிஞ்சவுக சொல்லுறாக
கொண்டலுள்ள கொடுமழையாம்
மண்டாடியார் மக வந்து சொல்லுச்சு
கூட போனவுக கர வந்து சேந்தாச்சு
தேட ஆளில்ல நா மட்டும் தவிச்சிருக்க
மழை பட்டு அழிஞ்சிருனு
எம் பொட்ட
சொளவு வச்சி மறைச்சிருக்கே
மரம் போன இடமெங்கே
மகராசா சொல்லிவிடு
காரசேலைக்கட்டி
கரையோரம் காத்திருக்கே
நேரம் தாண்டிடுச்சு
நெஞ்சமெல்லாம் பதறுதுங்க
ஓலக்குடிசைக்குள்ள ஒழுகுறதண்ணிக்கு
பாத்திரத்தை வச்சிருக்கே
ஏத்துணத்த காணுமே -எம்
மவராசா எங்கிருக்க
வந்துருவ நீ வந்துருவ
மழகாத்து நின்னுபோவும்
கடல்தாயும் கைகொடுப்பா
கரையோரம் காத்திருக்கேன்