இயற்கை முரண்

இயற்கை முரண்

நண்பகல் இரவோடு
கைகுலுக்கியது
ஆண்கள் பிரசவித்தார்கள்
கணவன்மார்கள் விதவையானார்கள்
கைம்பெண்கள் தாலியெடுத்து
கொடுத்தார்கள்
உவமையற்ற கவிதைகள்
பிறந்தது
மேற்கே உதித்து
கிழக்கே அஸ்தமனம்
நடந்தது
கானல் நீரை
குப்பிகளில் விற்றார்கள்
கேள்விகளே இல்லாத
விடைகள் பிறந்தன
இரும்பு தங்க விலைக்கு
விற்கப்பட்டது
இவையெல்லாம் இயற்கை முரண் என்றால்
இதோ
வெட்டவெளியான காடுகள்
நீர்தேடி நகரம் புகுந்த
விலங்கினங்கள்
களவாடப்பட்ட ஆறுகள்
வெடிகுண்டுகளால் காயம்பட்ட
மலைகள்
வெட்டியெடுக்கப்பட்ட பூமி தாயின்
தேகங்கள் மணல்குவாரிகளாய்
நீர் வீழ்ச்சி
எழுச்சிகொண்டு நடந்த
ஆற்றுப்படுகைகள் தொலைந்துபோனது
கரைபுரண்ட ஆறுகள்
இளைப்பாறிய குளங்கள் காணாமல்போனது
ஆண்பெண் புணர்ச்சியின்றி
பிறந்த குழந்தைகள்
காசுக்காக விற்கப்படும்
ஓட்டுக்கள்
இவையெல்லாம் எந்த முரண்

எழுதியவர் : இளவல் (5-Sep-18, 11:18 am)
சேர்த்தது : இளவல்
Tanglish : iyarkai muran
பார்வை : 467

மேலே