காதலி
காதலி
நினைவுகளை நீராய் ஊற்றி
நித்தம் என்னுள் உனைவளர்த்தேன்!
கனவுகளைக் காவல் வைத்தே
காதல் பயிர் வளர்த்துவிட்டேன்!
சிப்பியினுள் முத்தினைப் போல்-என்
சிந்தையிலே நீயிருந்து
செப்பிடும் என்கவிதை யெலாம்
சிறப்புறவே செய்து விட்டாய் !
தொட்டிலில் கிடந்த நாளில்
தோன்றிய காதல்!-இன்று
கற்றிட விரும்பி உந்தன்
காதலை வளர்த்துக் கொண்டேன்!
கற்பனை என்பதெல்லாம் உனைக்
கண்டபின் நானறிந் தேன்!
கற்பனை செய்வதற்கே - நான்
கவிஞனாய் மாறிவிட்டேன்!
பொற்குவியல் வேண்டாம்!
பொன்னாடை ஏதும் வேண்டாம்!
சொற்களஞ்சி யம்நீ எந்தன்
சொந்த மானால் போதும்!
பொற்புடை யாள் எனதருகில்
புன்னகையில் தினமிருந்தால்
நற்சுவையில் உணவெதற்கு !
நான்உலகில் வாழ்வதற்கு!
சித்தனாய் ஆவதற்கே அவள்
சிறப்பினில் நான்மயங்கி
முத்தமிழ் பெண்மனந்தேன்! - இனி
மூப்பினை அடைய மாட்டேன் !
மனிதனாய்ப் பிறந்துதமிழ்
மண்ணிலே வளர்ந்ததாலே
புனிதனாய் மாறிவிட்டேன்!
புகழினை அடைந்துவிட்டேன்!