தொலைந்துபோன ஓசைகள்
தொலைந்துபோன ஓசைகள்
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்...
காலையில் ....
இட்லி தோசைக்கு
சுவையான தேங்காய் சட்டினிக்கு
அம்மா அம்மியில்
இழுத்து அரைக்கும் ஓசை !
மதியம் உணவுக்கு
விறகு அடுப்பில்
வீற்றிருக்கும் மண்பானையில்
உலை கொதிக்கும் ஓசை !
மாலையில்...
இட்லி தோசை மாவுக்கு
மணக்கும் அரிசி பருப்பு
அக்கா ஆட்டுரலில்
கட முடவென சுற்றும் ஓசை !
காலையில்.....
‘இன்று பிறந்தநாள் பிறந்தநாள்
நாம் பிள்ளைகள்போல்
தொல்லைகளெல்லாம் மறந்த நாள்’
இலங்கை வானொலியில்
வாழ்த்துக்கூறும் இனிய ஓசை!
மாலையில்
தெருவில் சின்னஞ்சிறுமிகள்
‘ஒரு குடம் தண்ணீர் ஊற்றி
ஒரு பூ பூத்தது’ கூட்டமாக
விளையாடும் ரிதமான ஓசை !
பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி , ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்