சிக்னல்
சிக்னல்
கிரீச்ச்ச்!!.. வேகமாக வண்டியை நிறுத்தினேன். “பாவி, எங்கிருந்துதான் வந்தானோ என்று” என்று நான் நினைப்பதற்குள் சாலை சந்திப்பில் மஞ்சள் நிறம் சிகப்பிற்கு மாறியிருந்தது. விரலின் நுனிகளால் எஃப் எம்மில் ஒலிபரப்பான ஏதோ ஒரு பாட்டிற்கு ஸ்டியரிங் வீலில் தாளம் போட்டுக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தேன். மனது எங்கெங்கோ அலைந்து திரிந்தது. ஒரு சுற்று போய் வந்தேன்.
முதல் வேலையாக அந்தோணியையும் கொஞ்சம் வேலை பார்க்க உந்தித் தள்ளவேண்டும். எப்படியும் இந்த வார இறுதிக்குள் பிராஜெக்டை முடித்துக் கொடுக்கவேண்டும். இல்லையென்றால் கடுவன் பூனை எங்கள் இருவரையும் பிராண்டிக் கொன்றுவிடும்.
அகத்தியன் மிகவும் நல்லவன். நான் இந்தக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த அன்றுதான் அவனும் வந்திருந்தான். என்னிடம் கொடுத்த பணத்தை இரண்டு மாதங்களாகக் கேட்கவேயில்லை. அவன் திரும்பக் கேட்பதற்குள் ஒரு பகுதியையாவது இந்த வாரத்திற்குள் கொடுத்துவிடவேண்டும்.
பிரியாவிற்கு வேறு பிறந்த நாள். விலை குறைந்த ஆடை வாங்கிக்கொடுத்தால் சப்னா “ எனக்குத்தான் வழியில்லை. பழகிடுச்சு. சின்னக் குழந்தை. ஒரு நல்ல டிரெஸ் வாங்கினாத்தான் என்ன?” என்று கொதி எண்ணையில் கடுகைப் போட்டது போல் பொறிந்து தள்ளிவிடுவாள். மாலை வீடு திரும்பும் போது மறக்காமல் வாங்கிவிடவேண்டும்.
எதற்கும் நௌக்கிரியில் பயோடெட்டாவை கொஞ்சம் மாற்றி மேம்படுத்தவேண்டும். இந்த நிருவனத்திற்கு வேலைக்குச் சேர்ந்து நான்கு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போதே டிப்பார்ட்மெண்ட் ஹெட் தன் உறவுக்கரப் பெண்ணை என் வேலையில் அமர்த்த மறைமுகமாக போராடிக்கொண்டிருக்கிறார்.
“கண்ணாடி வழியாகப் பார்த்து கைகூப்பி நின்ற சிறுவன் என்னையே பார்த்தான். முன்பை விட கொஞ்சம் பளிச்சென்றிருந்த பானெட்டை பார்த்தபடியே கண்ணாடியை கீழிறக்கி அந்தச் சிறுவனுக்கு இரண்டு ரூபாய் கொடுதேன். “டாங்க்ஸ் சார்” என்று என்னிடம் முழு ஆங்கிலம் பேசிய திருப்தியில் அடுத்த வண்டிக்கு மாறினான்.
மறுபடியும் கடுவன் பூனை ஞாபகத்திற்கு வந்தது. இவன் கொடுக்கும் சம்பளத்திற்கு திண்டுக்கல் தலைப்பாகட்டி வாசலில் பீடாக் கடை வெச்சு பிழைத்துக்கொள்ளலாம் என்று தோன்றியது. “கூல்” என்று எனக்கு நானே கூறிகொண்டேன்.
ஒரு வட இந்தியச் சிறுமி கைகளில் ஹெலிகாப்டரை வைத்துக்கொண்டு குழந்தைகள் யாராவது வண்டிக்குள் இருக்கிறார்களா என்று குனிந்து கண்ணாடி வழியாகப் பார்த்துவிட்டு ஒரு சிறிய ஏக்கத்துடன் கடந்து போனாள்.
இப்போது குறுக்காகச் சென்று கொண்டிருந்த வாகனங்கள் நிற்க இடது புறச் சாலையில் வாகனங்கள் சீறிப்பாய்ந்தது. இடையிடையே சினேகா காம்ளான் குடித்தால் வேகமாக உயரமாக வளரலாம் என்று எஃப் எம்மில் நம்பிக்கை வார்த்துக் கொண்டிருந்தாள்.
காரின் வலது பக்கம் நின்றிருந்த வளர்த்தியான இளைஞன் ஹெல்மெட்டை சிறுது தளர்த்தி மொபைலில் எதையோ தேடிக்கொண்டிருந்தான். மறக்காமல் பிளம்பருக்கு போன் செய்ய வேண்டும். ஷவரில் இருந்து தண்ணீர் சொட்டிக்கொண்டே இருக்கிறது.
பிரியாவை பள்ளியில் விட்டு சப்னா அலுவலகம் சென்றிருப்பாள். அவளிடமிருந்து பதிவான குறுஞ்செய்தி வந்திருக்கிறதா என்று பார்த்தேன். இப்போதெல்லாம் அவளுக்கு அடிக்கடி அதிகம் கோபம் வருகிறது. விரையில் அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும்.
கடுவன் பூனையிடம் பிராண்டு வாங்க இன்னும் பத்து நிமிடங்கள்தான் இருக்கிறது. ஏதாவது ஒரு காரணத்தைத் தேடிப்பிடித்து வழி மேல் விழி வைத்து கூறிய நகங்களுடன் காத்திருக்கும். முன்பு போல அலுவலகம் இல்லை. வெங்கிடு தலையில் இடியே விழுந்தாலும் நிரந்தரப் புன்னகையுடன் அதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்கு மாற்றப்பட்டிருந்தான். நகுல் வளர்ந்து கொண்டே இருக்கிறான். எதற்கு என்றுதான் தெரியவில்லை. குணாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். தொலைந்து போன மெம்மரி கார்டை தேடியலையும் ரோபோ போல் ஒரு இடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருப்பான்.
அப்பாவைப் பார்த்து இருபது நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. எப்படியும் இந்த வாரக் கடைசியில் கண்டிப்பாக அவரைப் பார்த்து செலவிற்குக் கொஞ்சம் பணமும் கொடுக்கவேண்டும். முடிந்தால் இருவரும் சேர்ந்து ரத்னா கபேயில் ஆளுக்கு இரண்டு பிளேட் சாம்பார் இட்லி சாப்பிட வேண்டும்.
நேற்று நடந்த நேர்முகத் தேர்வில் அந்தக் கம்பெனி தலைமையின் உதவியாளர் பருத்த தன் உடம்பை வழிய வழிய இருக்கையில் பொருத்திக்கொண்டு என்னையே சிறிது நேரம் உற்றுப்பார்த்தான். கைகளைச் சோர்வுடன் கன்னத்தில் வைத்துக்கொண்டு தமிழில் என் குடும்பம், கம்பெனி பற்றி மிகவும் அன்யோன்யமாக அனைத்தையும் கேட்டுவிட்டு ஆங்கிலத்தில் “இந்த வேலைக்கு நீங்கள் எப்படி பொருத்தமானவர்?” என்று கேட்டு என்னை ஒரு நொடியில் தினறடித்தான். அனைத்தையும் அவனிடம் கொட்டிக்கவிழ்த்து காலிப்பாத்திரம் போல இருந்தது மூளை அடுக்குகள். அவனை …….XXX. மீண்டும் எனக்கு நானே “கூல்” என்று சொல்லிக்கொண்டே காரின் பின் கண்ணாடி வழியாகப் பார்த்தேன். நிச்சயம் காதலர்களாகத்தான் இருக்கவேண்டும். காத்திருப்பை மிகவும் உபயோகமாகச் செலவழித்துக்கொண்டிருந்தார்கள். உற்றுப்பார்த்தேன். அந்தப் பெண் எங்கள் எதிர் வீட்டில் குடியிருக்கும் மாமாவின் சாயலில் இருந்தாள். எதற்கும் சப்னாவின் காதுகளில் இதை மறக்காமல் போட்டு வைத்துவிடவேண்டும்.
சிக்னல் மஞ்சள் நிறத்தில் இருந்து பச்சைக்கு மாறுவதற்குள் வண்டிகள் வேகமாக நகர ஆரம்பித்தது. இனி அலுவலகம் செல்லும் வரை எந்த சிக்னலும் கிடையாது. சாலையில் இடது பக்க ஓரத்தில் விழுந்த கிடந்த ஒரு முதியவரைச் சுற்றி நாணயங்கள் சிதறிக் கிடந்தது. அலுவலகம் விட்டவுடன் மறக்காமல் ஒரு நடை மைலாப்பூர் சென்று அப்பாவை பார்த்துவிட்டு வர மனம் ரகசியமாக ஏங்க ஆரம்பித்தது.